புதுடில்லி : ‘சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை அறிந்த டாக்டரே புகார் செய்யாதது மிகக்கடுமையான குற்றம்; குற்றவாளிகளை காப்பாற்றும் செயல்’ என, உச்ச நீதிமன்றம் கூறியது.
மஹாராஷ்டிர மாநிலம் ரஜூரா நகரில் உள்ள பழங்குடியினருக்கான பெண்கள் பள்ளி விடுதியில் 17 சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். ஆனால் இதுகுறித்து, விடுதியின் மருத்துவ அதிகாரி அறிந்திருந்தும் புகார் செய்யவில்லை.
இந்த வழக்கில் விடுதி டாக்டரை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மஹாராஷ்டிர போலீஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தகி, சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ‘சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை அறிந்து இருந்தும் புகார் செய்யாதது மிகக்கடுமையான குற்றம். இது, குற்றவாளிகளை பாதுகாக்கும் செயல்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் விடுதி டாக்டர் மீது தொடரப்பட்ட வழக்கு, போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை அடிப்படையில் விசாரிக்கப்படும்’ என தீர்ப்பளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement