மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக் கோரிய சிபிசிஐடி வழக்கு குறித்து சிவசங்கர் பாபா பதிலளிக்க
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அந்தப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த 2021 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்கக் கோரி எந்த மனுவையும் சிபிசிஐடி தாக்கல் செய்யாத நிலையில், வழக்கை நடத்த முடியாது எனக் கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து அண்மையில் உத்தரவிட்டது.
வழக்கு ரத்து செய்யப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக் கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது காவல் துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை கருத்தில் கொள்ளாமல் வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறினார். இதனையடுத்து, மனு குறித்து சிவசங்கர் பாபா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.