பிரதமர் மோடி மீது திடீர் பாசம்! – பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறாரா விஷால்?

கடந்த சில தினங்களாகவே விஷால் குறித்து பரபரப்பான செய்திகள் வெளி வந்து கொண்டே இருக்கிறது. அதில் முக்கியமாக அவருக்கும் நடிகை அபிநயாவுக்கும் திருமணம் நடைபெற்றதாக வதந்திகள் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு படத்தில் நானும் விஷாலும் கணவன் மனைவியாக நடிப்பதாகவும் அதிலிருந்து வெளியான புகைப்படம் தற்போது சர்ச்சையாக மாறி இருப்பதாக இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை அபிநயா. தற்போது காசிக்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டுள்ள விஷால் அங்கு கங்கையில் நீராடிய பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அன்புள்ள மோடி ஜி, அற்புதமான தரிசனம், பூஜை செய்து கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு தலை வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கங்கை நதி

ஒருவேளை விஷால் பாஜகவில் இணைவதற்காக இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கிறாரோ என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கம்

முன்னதாக, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகர் விஷால். அதன் பிறகு தமிழக அரசியலிலும் கால் பதிக்க வேண்டும் என்று எண்ணிய அவர் , முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு, தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அவரால் போட்டியிட முடியாமல் போனாலும் அரசியலில் அவருக்கு ஆர்வம் இருந்தது அப்போது உறுதியானது.

அதே போல், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் என்னும் தர்காவில் வழிபட்டார். அப்போது அரசியல் வருகை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, `சமூக நலனுக்காக ரூ. 100 செலவழித்தாலே அவர்கள் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். அப்படி பார்த்தால் தான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன்’ எனக் கூறினார். இந்நிலையில் தான், பிரதமர் மோடியை பாராட்டிய செய்தி கவனம் பெற்றது.

கங்கனா ரணாவத்

இப்படி விஷால் அரசியல் வருகை குறித்த யூகங்கள் எழுதுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2020-ம் ஆண்டில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் மகாராஷ்டிரா அரசை விமர்சித்ததற்காக அவர் அலுவலகத்தை இடித்தது அம்மாநில அரசு. அதை எதிர்த்த கங்கணாவுக்கு ஆதரவாக பேசினார் விஷால். இதனால் இவர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. காரணம், பாஜக கொள்கைகளுக்கு கங்கணா ஆதரவாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது வைக்கப்பட்ட இந்த விமர்சனத்தை முற்றிலுமாக மறுத்தார் நடிகர் விஷால்.

விஷால்

தற்போது மோடிக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்டு இருப்பதால் பாஜகவில் அவர் இணைய இருப்பது உறுதி என்பது போன்ற கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.

அதே நேரம், தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகவின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் உடன் நெருங்கிய நட்புடன் இருக்கிறார் விஷால். அவர் நடித்த லத்தி படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின்

இப்படி திமுக, அதன் முக்கிய தலைவருடன் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்யும் விஷால், அதற்கு எதிர் துருவத்தில் இருக்கும் பாஜகவில் இணைந்து அவர்களை விமர்சிக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்போது, விஷால் கங்கை தூய்மையாக இருப்பதை பாராட்டினாரே தவிர, அவர் பாஜகவில் சேருவது என்பது சந்தேகமே என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.