சென்னை அமைந்தகரை, கலெக்டர் காலனியில் வசித்து வந்தவர் நாகூர் கனி (33). இவரது மனைவி கதீஜா. இந்த தம்பதிக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் அயனாவரம் மார்க்கெட் சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரீம் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்தார்.
நேற்று வழக்கம்போல் இரவு நாகூர் கனி கடையில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 5-க்கும் மேற்பட்ட கும்பல், நாகூர் கனியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த நாகூர் கனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் உடனே அயனாவரம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நாகூர் கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளைத் தேடிவருகின்றனர். மேலும் நாகூர் கனி கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இக்கொலையால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.