பெண்களுக்காக போராட பாஜகவுக்கு தகுதியே இல்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

திமுக பேச்சாளர் பாஜகவில் இருக்கும் பெண் உறுப்பினர்களை அவதூறாக பேசினார். இதனையடுத்து அவரது பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதுதொடர்பாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. அதில் அண்ணாமலை கைதும் செய்யப்பட்டார். இந்த சூழலில், நாகர்கோவிலில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கவர்னர்கள் செயல்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னர்கள் தங்கள் எல்லையை அறிந்து, அவற்றில் இருந்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நன்மைக்காக பாடுபட வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்கிறார்களா? என்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். 

கவர்னர்களை யார் செயல்படுத்துகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொன்று விட்டு கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் விடுதலையாகி வந்தபோது வரவேற்பு அளித்த பாரதீய ஜனதா கட்சியினர், பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியற்றவர்கள். தி.மு.க. பிரமுகர் பேசியது தொடர்பாக துணை பொதுச் செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னரும், தங்களை விளம்பர படுத்துவதற்காக அண்ணாமலை செயல்படுவது ஏற்புடையது அல்ல” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.