மகனை கொலை செய்ய கூலிப்படைக்கு முதலில் ஒன்றரை லட்சம் ரூபாயை ராம் சிங்-ராணி பாய் தம்பதி கொடுத்துள்ளது
போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்களை தொந்தரவு செய்து வந்ததால் மகனை கொலை செய்ததாக சாய் ராம் பெற்றோர் தெரிவித்தனர்
இந்திய மாநிலம் தெலங்கானாவில் போதைப்பழக்கத்திற்கு அடிமையான மகனை பெற்றோரே கூலிப்படை மூலம் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராம் சிங் – ராணி பாய். இவர்களது மகன் சாய் ராம் வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு சாய் ராம் பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இதனால் அவரது பெற்றோர் போதை மறுவாழ்வு மையத்தில் சாய் ராமை சேர்த்துள்ளனர்.
ஆனாலும் சாய் ராம் தொடர்ந்து தனது பெற்றோருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மகனின் தொல்லை தாங்க முடியாத ராம் சிங் – ராணி பாய் தம்பதி சத்திய நாராயணனை அணுகியுள்ளனர்.
ராணி பாயின் சகோதரரான இவர் கூலிப்படையை குறித்த தம்பதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
தங்கள் மகனை கொலை செய்ய திட்டமிட்ட இருவரும் சாய் ராமை கூலிப்படை மூலம் கொன்றுள்ளனர்.
அதன் பின்னர் சூர்யபேட்டை முசி ஆற்றின் அருகே சாய் ராம் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராம் சிங், ராணி பாயை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.