சென்னையில் மாநகரப் பேருந்தை வழிமறித்து நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட இரு கல்லூரி மாணவர்களை பிடித்து போலீசார் எச்சரிக்கை செய்து, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட வைத்தனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் ரயிலில் பயணித்து, நடைமேடையில் பட்டாக் கத்தியை உரசியபடி சென்ற வீடியோக்கள் அவ்வவ்போது வைரலாகி வருகின்றன. அதேபோல, ரூட்டுத் தலை தொடர்பான பிரச்னைகளிலும் கல்லூரி மாணவர்களின் பல்வேறு அட்டகாசங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகினறனர். இந்நிலையில், எண்ணூர் நெடுஞ்சாலையில் திருவெற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற தடம் எண் 101 என்ற பேருந்தை இரு கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் நிறுத்தி ரீல்ஸ் செய்து அதனை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதனைத் தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த வட சென்னை இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவின் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன் குமார் இளஞ்சிறார்களான இரு மாணவர்களையும் பிடித்து நேரில் பெற்றோருடன் வரவழைத்து எச்சரித்துள்ளார். மேலும், மாணவர்கள் இருவரும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கல்லூரி முடிந்த பிறகு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுப்பட வேண்டும் என்ற நூதன தண்டனையும் அவர் வழங்கியுள்ளார்.
அதேபோல மாணவர்கள் இருவரின் பெற்றோரையும் இணை ஆணையர் ரம்யா பாரதி நேரில் அழைத்து இனி இதுபோன்ற தவறு நடைபெறாமல் இருக்க அறிவுறுத்துமாறு கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM