மயிலாடுதுறை துலா கட்டத்தில் சாலைமேம்பாடு, சுகாதாரம், தெருவிளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் துலாக்கட்டப் பாதுகாப்புக் கமிட்டி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
“கங்கை தன்னுடைய பாவத்தைப் போக்க சிவபெருமானிடம் வேண்டியபோது, ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் தமிழ்நாட்டில் காவிரி நதி பாயும் மயிலாடுதுறை துலாகட்டத்தில் நீராடினால் உனது பாவங்கள் போக்கப்படும்” என்று சிவபெருமான் வரம் அளித்ததாக ஐதிகம். அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் மயிலாடுதுறை துலாக் கட்டக் காவிரியில் கங்கையே தன் பாவத்தைப் போக்குகின்ற காரணத்தால், ஆன்மிக பக்தர்களும் பெருமளவில் திரண்டு நாள்தோறும் புனித நீராடி வருகின்றனர்.
இதுபற்றி துலா கட்டப் பாதுகாப்புக் கமிட்டியைச் சேர்ந்த அப்பர்சுந்தரத்திடம் பேசினோம்.
“வட இந்தியாவின் கும்ப மேளாவிற்கு நிகராக நடைபெற்று வரும், புனிதமான துலா உற்சவத்தை முன்னிட்டு வரும் 16 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே வேளையில் இந்த மாதம் முழுவதும் பல ஊர்களிலிருந்து பக்தர்கள், ஆன்மிகப் பெரியவர்கள், பெண்கள், துறவியர்கள் தினம்தினம் வந்து கொண்டே இருப்பதினால் துலா கட்டத்தைத் தூய்மைப்படுத்தி சுகாதாரப்பணிகள், கழிப்பறைகள், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும். மகாதான தெருவையும் துலா கட்ட மண்டபத்தையும் இணைக்கும் சாலையானது மிக மோசமாக உள்ளது. அப்பகுதி ஆதீனங்களுக்குச் சொந்தமானது என்கிற காரணத்தினால் நகராட்சி நிர்வாகமும் சாலை அமைக்க முற்படாதது மிகவும் வருந்தத்தக்கது. இவ்விஷயத்தில் நேரடியாக மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்தாவது துலா உற்சவத்தை முன்னிட்டு இச்சாலையை மாற்றி தர வேண்டும்.
மேலும் தினசரி தூய்மைப் பணி மற்றும் இருபுறக் கரைகளையும் படித்துறைகளையும் சிவப்பு வெள்ளை பட்டை வண்ணம் பூசி புதுப்பித்துத் தரவும் நகராட்சி நிர்வாகத்தைக் கோருகிறோம். கடந்த சில மாதங்களாகவே காவேரியில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பது மிகவும் போற்றுதற்குரியதாகும். அதனால் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் துலா கட்டத்தில் உடனடியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும்” என்றார்.