துருக்கியில், ஹக்கன் அய்சல்(Hakan Aysal) என்பவர், தன்னுடைய மனைவியான செம்ரா அய்சலுடன்(Semra Aysal) 1000 அடி உயரம் மலையுச்சியில் செல்ஃபி எடுத்த அடுத்த கணமே அவரை கீழே தள்ளிவிட்டுக் கொலைசெய்ததற்கு, நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால், விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட கொலைக்கான காரணம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம், துருக்கி மாகாணம் முக்லாவிலுள்ள(Mugla) பட்டர்ஃபிளை பள்ளத்தாக்குக்கு(Butterfly Valley) ஹக்கன், செம்ராவை அழைத்துச்சென்றிருக்கிறார். அப்போது செம்ரா, 7 மாத கர்ப்பிணி. செம்ராவும் மலையுச்சிக்குச் செல்ல பயந்திருக்கிறார். ஆனால், ஹக்கன் செல்ஃபி எடுக்கலாம் என ஆசைவார்த்தை கூறி செம்ராவை 304 மீட்டர் உயர உச்சிக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். அப்போது செம்ராவுடன் செல்ஃபி எடுத்த ஹக்கன், திடீரென யாரும் பார்க்காத நேரத்தில் செம்ராவை கீழே தள்ளி கொன்றிருக்கிறார்.
பின்னர் இந்த சம்பவம் நடந்த சில நாள்களிலேயே, செம்ராவின் பெயரில் இருந்த 25,000 டாலர் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பணத்தை நீதிமன்றத்தில் ஹக்கன் கோரியிருக்கிறார். ஆனால், இதனை விசாரித்த ஃபெதியே(Fethiye) உயர் குற்றவியல் நீதிமன்றம், அவரின் மனுவை நிராகரித்தது. பின்னர் இந்த விவகாரத்தில், செம்ராவின் மூத்த சகோதரர் நைம் யோல்கு(Naim Yolcu), “நாங்கள் உடலைப்பெற தடயவியல் மருத்துவ நிறுவனத்திற்குச் சென்றபோது, ஹக்கன் காரில் அமர்ந்திருந்தார். நானும் என்னுடைய குடும்பமும் சோகத்தில் மூழ்கியிருந்தோம். ஆனால் ஹக்கன் சோகமாக கூட தோன்றவில்லை” எனக் கூறியதாகப் பத்திரிகையில் செய்தி வெளியாக, ஹக்கன் மீது சந்தேகம் மேலும் அதிகரித்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து விசாரணையில், செம்ராவின் லைஃப் இன்சூரன்ஸ் பணத்துக்காகவே ஹக்கன் அவரை மலையிலிருந்து தள்ளிக் கொலைசெய்திருக்கிறார் எனக் கண்டுபிடிக்கப்படுகிறது. அதையடுத்து தற்போது இந்த வழக்கில், ஹக்கன் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.