உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா தமிழ் முறைப்படி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரம் அன்று அவரது 1037-வது ஆண்டு சதய விழா இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று தொடங்கிய ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, ஆகியவை நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வு இன்று காலை 7 மணிக்கு திருமுறை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதியுலா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி தமிழ் முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருமுறை வீதி உலா தஞ்சை மாநகர 4 விதியில் நடைபெற்றுள்ளது. தஞ்சை பெரிய கோயில் வளாகத்திற்குள் திருவீதி உலாவும் சென்றது.
பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார்க்கு திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி பால், மஞ்சள், சந்தனம், திருநீர், தேன், அரிசிமாவு பொடி, நெய், தயிர், பன்னீர், எலுமிச்சை பழச்சாறு, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், மூலிகைப் பொடிகள் உள்ளிட்ட 48 வகையான பொருட்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பேரபிஷேகத்தை தொடர்ந்து, மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதையடுத்து பெரிய கோவிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM