சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழா தஞ்சாவூரில் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது.
ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்ததாக கல்வெட்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு ஆண்டு தோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜ ராஜ சோழனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா என்ற பெயரில் இரண்டு தினங்கள் விழா கொண்டாடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் ராஜ ராஜ சோழனின் பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர்
தனது ட்விட்டர் பதிவில், “தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்! அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார்கள். மேலும்,அவரது ஆட்சியில் ‘தமிழகம்’ ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ராஜ ராஜ சோழனின் சிலைக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தருமபுர ஆதீனம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 48 விதமான வாசனை திரவியங்களால் தஞ்சை பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.