சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி, மாநிலஅவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், மக்களின் புகார்கள்மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் தமிழகத்தைச் சீரழித்து விட்டதாகவும், ஒன்றரை ஆண்டுகளில் அதை சரி செய்து விடுவோம் என்றும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற் கொண்டார்.
புகார் மீது உடனடி நடவடிக்கை: அப்போது, மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்களுக்கு அனுப்ப வேண்டிய முன்னெச்சரிக்கை செய்திகளை உடனடியாக அனுப்புமாறும், ‘1070’ என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், நிலுவையில் உள்ள 70 புகார்களுக்கு உரிய தீர்வுகாணும்படியும் முதல்வர் உத்தரவிட்டார்.
இதுதவிர, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்களைத் தொடர்புகொண்டு, கள நிலவரத்தைக் கேட்டறிந்து, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உத்தர விட்டார்.
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்ட பொதுமக்களிடமும் தொலைபேசி மூலம் உரையாடி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
முதல்வருக்கு மக்கள் நன்றி: அப்போது, வெள்ளப் பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டவுடன், அரசு துரிதமாகச் செயல்பட்டு, பாதிப்புகளுக்கு உரிய தீர்வுகண்டு வருவதற்காக முதல்வருக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
ஆய்வின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறைச் செயலர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.அ.ராமன் உடனிருந்தனர்.
ஆய்வு முடிந்து வெளியே வந்த முதல்வர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வடசென்னையில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் தகவல்கள் கிடைத்தன. தேங்கியதண்ணீரை உடனுக்குடன் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கடந்த முறை போல இல்லாமல், தண்ணீர் எங்கேயும் பெரியஅளவில் தேங்கி நிற்கவில்லை என்று எல்லோரும் தெரிவிக்கின்றனர். தியாகராய நகர் போன்ற பகுதிகளில்கூட தண்ணீர் தேங்கவில்லை. சில இடங்களில் மட்டும் தேங்கியது. அதையும் சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
10 ஆண்டு அதிமுக ஆட்சியில்…: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகஆட்சியில் சென்னையை மட்டுமல்ல, தமிழகத்தையே சீரழித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதைசரி செய்ய வேண்டும் என்றால், அதிக ஆண்டுகளாகும். ஆனாலும்,நாங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்குள் சீரமைப்புப் பணிகளை முடித்து விடுவோம் என்ற நம் பிக்கை உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.