“ஷார்ட் பிலிம் `ஓஹோ'னு ஹிட்டாகி படம் பண்ணுறப்போ என்னை மறந்துடறாங்க!"- `டெல்லி' கணேஷ்

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களுள் முக்கியமானவர் டெல்லி கணேஷ். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் கலை அனுபவம் கொண்டவர். தற்போது வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்.

`டெல்லி’ கணேஷ்

“நான் பெரும்பாலான படங்களில் இயல்பா நான் எப்படி இருப்பேனோ அப்படியே தான் நடிச்சிருக்கேன். அதனாலேயே பலருக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. எப்போவாச்சும் அந்தக் கேரக்டருக்குத் தேவைப்படும் நேரத்தில் மட்டும்தான் ஒட்டு மீசை, தாடி எல்லாம் வச்சிருக்கேன். `அபூர்வ சகோதர்கள்’ திரைப்படத்தில் அப்படியான தாடி இருக்கணும்னு சொன்னதால வச்சிக்கிட்டேன். அது என் முகத்துக்கு பொருந்தியும் போச்சு. பலரும் எப்பவும் சிரிச்சிட்டே இருக்கீங்க ரொம்ப பிடிச்சிருக்குன்னுலாம் சொல்லியிருக்காங்க என்றவரிடம், `80களில் ரஜினி, கமல் இருவருடனும் இணைந்து பெரும்பாலான படங்களில் நடிச்சிருக்கீங்களே?’ எனக் கேட்டோம்.

ஆமா… உங்களுக்கும், கமலுக்கும் என்னங்க கெமிஸ்ட்ரி எல்லா படத்திலும் அவர் கூட இருக்கீங்கன்னு கேட்பாங்க. ஆனா, ரஜினிக்கும் எனக்கும் கூட அப்ப நல்ல கெமிஸ்ட்ரி இருந்துச்சு. பாபா படத்தில் என் நடிப்பு ரஜினிக்கே ரொம்பப் பிடிக்கும். பாபா, ராகவேந்திரா, பொல்லாதவன், புதுக்கவிதை, எங்கேயும் கேட்ட குரல்னு பல படங்களில் சேர்ந்து நடிச்சிருக்கேன். எனக்கும், கமலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அவர் ஊர்க்காரன் கூட கிடையாது. அவருடன் சேர்ந்து நடிச்சதெல்லாம் யோகம்னுதான் சொல்லணும்.

`டெல்லி’ கணேஷ்

`ராஜபார்வை’ என்கிற படத்தில் அவர்கிட்ட பேசும்போது, `நான் உங்க பரம ரசிகன்’னு சொன்னேன். அதற்குப் பதிலாக, ‘நான் உங்களுடைய ரசிகன்’னு சொன்னார். அது கூட அவருடன் பல படங்களில் சேர்ந்து நடிக்க ஒரு காரணமாக இருந்திருக்கலாம். நாயகி, தெனாலி, அவ்வை சண்முகின்னு தொடர்ந்து பல படங்கள் பண்ணினோம்.

`வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் கடைசியில் கெளதம் மேனன் என்னை நடிக்க வச்சார். அந்த சீன் தியேட்டரில் வந்தப்ப என்னைப் பார்த்ததும் பலரும் கைத்தட்டினாங்க. மக்கள் ரசிக்கிறாங்களேன்னு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. என் நண்பர்கள் பலரும் ஃபோன் பண்ணி உன் சீனுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. கெளதம் மேனனுக்கு பிடித்த திரைப்படம் `நாயகன்’. அதை அவர் பல இடங்களில் சொல்லியிருக்கார். அந்தப் படத்தில் நானும் ஒரு பார்ட் ஆக இருந்ததில் மகிழ்ச்சி என்றவரிடம் குறும்படங்களில்  நடிப்பது குறித்துக் கேட்டோம்.

`டெல்லி’ கணேஷ்

“இளைஞர்கள் சிலர் ஷார்ட் பிலிம் எடுக்கிறேன். நீங்க நடிச்சா நல்லா இருக்கும்னு கேட்பாங்க. அப்படி என்னைத் தேடி வந்து கேட்கிற பலருக்கு நான் உதவியிருக்கேன். நான் ஷார்ட் பிலிமில் நடிச்சுக் கொடுத்து அடுத்து ஓஹோன்னு பெயர் வாங்கின இயக்குநர் என்னை ஞாபகம் வச்சுகிட்டு மறுபடி அவங்களுடைய திரைப்படத்தில் என்னை நடிக்கக் கூப்பிட்டதாக சரித்திரமே இல்ல. நான் எதையும் எதிர்பார்க்கலைங்கிறதனால தான் இப்பவும் நடிக்க கேட்கிற இளைஞர்களுடைய ஷார்ட் பிலிம்ல நடிக்கிறேன். அவ்வளவு ஏன்.. பணம் இல்லைன்னு சொல்லி என் வீட்டை ஷூட்டிங்கிற்காக கேட்கிறவங்களுக்கு இலவசமா வீட்டைக் கூட கொடுக்கிறேன். ஆனா, எல்லாரும் வளர்ந்த பிறகு யாரும் திரும்பி வர மாட்டேன்றாங்க என்றவரிடம், ‘இந்தியன் 2’ குறித்துக் கேட்டோம்.

“ `இந்தியன் 2′ திரைப்படத்தில் இதுவரைக்கும் நான் பண்ணாத ஒரு கேரக்டர் பண்றேன். அதை சங்கர் சார்கிட்ட சொன்னப்ப, `அப்படி ஒரு கேரக்டர் இருக்கா சார்’னு கேட்டார். இதுவரைக்கும் ஒரு நாள் தான் ஷூட்டிங் போயிருக்கேன். நான் பயந்துட்டே இருந்தேன். கமலுக்கும், எனக்கும் டச் இல்லாம போயிருந்தது. அவர் அரசியல் அப்படி இப்படின்னு போயிட்டார். எப்பவும் போல பேசுவாரா… எப்படின்னுலாம் யோசிச்சேன். ஆனா, எந்த மாற்றமும் இல்ல. அப்படியே தான் இருந்தார். இடையில் பழைய கமல் காணாம போயிருந்தார். அரசியலில் புகுந்ததும் கொஞ்சம் இறுக்கமா இருந்தார். `விக்ரம்’ படத்துக்குப் பிறகு இப்ப மறுபடி குழந்தை கமல் ஆகிட்டார்!’ என்றார்.

டெல்லி கணேஷ்

இன்னும் பல விஷயங்கள் குறித்து டெல்லி கணேஷ் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.