1,037வது சதய விழா ராஜராஜ சோழன் சமாதியில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை

தஞ்சை: தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன், 1010ம் ஆண்டு பெரிய கோயிலை கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார். இந்த கோயில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1037வது சதய விழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

அதன்படி நேற்று பெரிய கோயில் வளாகத்தில் மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் விழா தொடங்கியது. 2ம் நாளான இன்று காலை 7.30 மணிக்கு தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார். இதையொட்டி திருமுறை ஓதுவார் திருமுறைப்பண்ணுடன் ராஜவீதிகளில் திருமுறை திருவீதி உலா நடந்தது. பின்னர் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

 சிறப்பு பூஜை
சோழர்களின் தலைநகரமாக கும்பகோணத்தை அடுத்த பழையாறு விளங்கியதாக வரலாறு கூறுகிறது. உடையாளூர் கிராமத்தில் ராஜராஜசோழனின் சமாதி இருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ராஜராஜசோழனின் சமாதி இருப்பதாக கூறப்படும் இடத்தில் புதையுண்டு நான்கடி வெளியே தெரியும் சிவலிங்கம் உள்ளது. இந்த இடத்தில் ஆண்டுதோறும் ராஜராஜசோழனின் சதய விழாவின்போது உடையாளூர் கிராம மக்கள்  பூஜைகள் செய்து விழா கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் சதய விழாவையொட்டி இன்று காலை உடையாளூரில் ராஜராஜசோழனின் சமாதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ராஜராஜசோழர் பரம்பரையினரான பிச்சாவரம் ஜமீன் குடும்பத்தினர் நந்திகொடி, புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனைதொடர்ந்து யாக பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகம் நடந்தது. பின்னர் 108 சங்காபிஷேகமும், மகா அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.