நெல்லை: நெல்லை சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்லபாண்டியன் மகன் போட்டோகிராபர் நடராஜன் (30) வீட்டில் நீதிமன்ற அனுமதி பெற்று சோதனை நடத்தினர். அப்போது அவர் சிலைகள் பதுக்கியது தெரியவந்தது.
வீட்டில் 24 செ.மீ உயரமும் 0.586 கிராம் எடையுள்ள விநாயகர் சிலை, சுவரில் மாட்டக்கூடிய 43.5 செ.மீ உயரமுள்ள, 1.280 கிலோ எடையுள்ள விநாயகர் சிலை, 9.5 செ.மீ உயரமும், 0.448 கிராம் எடையுள்ள சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிலை, 8 செ.மீ, 0.122 கிராம் எடை உள்ள தாரா அம்மன் தலை உள்பட 5 சிலைகள் சோதனையில் போது கண்டறியப்பட்டன. இந்த சிலைகள் குறித்து எவ்வித ஆவணமும் அவரிடம் இல்லை.
இதையடுத்து கடத்தல் சிலைகள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 சிலைகளையும் நடராஜன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் சிலைகள் எங்கிருந்து பெறப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் தமிழகத்தில் உள்ள ஏதேனும் கோயில்களில் காணாமல் போன சிலைகளா என்பது விசாரணையில் தெரியவரும்.
மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் பழமையான சிலைகளா, எந்த காலத்தை சார்ந்தது, ஐம்பொன் சிலைகள் குறித்த தொன்மை தன்மை ஆகியவற்றை கண்டறிய புதுடெல்லியில் உள்ள தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த ஆய்வின் அடிப்படையில் சிலைகள் குறித்த தொன்மை தன்மை தெரியவரும்.