சென்னையில் உள்ள தியாகராய நகரில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற, புதிய அரசியல் தலைவர்களை உருவாக்கும் பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அந்த விழாவில் அவர் பேசியதாவது,“குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி, பாஜகவின் கட்சிப் பொறுப்பிற்கு வந்த போது குஜராத்தில் 2.5% வாக்குகள் தான் இருந்தது. ஆனால், தற்போது நாடு முழுவதும் பாஜகவிற்கு 40% வாக்குகள் உள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளதில், 60 முதல் 64 தொகுதிகளில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. அதில் திமுக அல்லது அதிமுக வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியாது. ஒரு வேளை நீங்கள் திராவிட கட்சிகளில் இணைந்து பொறுப்புகளை வகித்து அந்த 64 தொகுதிகளில் நீங்கள் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம் உறுதி.
ஒரு நல்ல தலைவர்களால் தான் கட்சியை வளர்க்க முடியும். சமூகத்தில் சாதாரண நபர்கள் செய்யும் குற்றத்தை மக்கள் பெரிதுபடுத்தமாட்டார்கள். ஆனால், தலைவர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் தவறு செய்தால் பொது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று அவர் பேசியுள்ளார்.