தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வேளாண்மை தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் 5 நாட்கள் நடந்தது.தேனி மாவட்டத்தில் லட்சுமிபுரம், பூதிப்புரம், வடுகபட்டி மற்றும் ஜி.கல்லுப்பட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வேளாண்மை தொழிற்பிரிவில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பெரியகுளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் 5 நாட்கள் செய்முறை பயிற்சி முகாம் நடந்தது.
இம்முகாமில், மண்புழு உரம் தயாரித்தல், ஒட்டு கட்டுதல், கொய்யா பதியமிடுதல், தக்காளி குழித்தட்டு நாற்றங்கால் தயாரித்தல், உயிர் உரம் தயாரித்தல், மற்றும் பண்ணை கருவிகளை பயன்படுத்துதல் போன்றவற்றில் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.அனைத்து பயிற்சிகளையும் பண்ணை மேலாளர் சிவசங்கரி, உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தசாமி மற்றும் பண்ணை தொழில்நுட்ப வல்லுனர்கள் அளித்தனர். இப்பயிற்சியில் வேளாண்மை அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் ரேணுகா, வெற்றிச்செல்வி, மீனாதேவி, ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.