சென்னை: “தமிழகத்தில் ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை ஏற்கெனவே 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர். இந்த பாலை சந்தா அட்டைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு அதே விலைதான், அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர்களுக்கு இந்த பால் ரூ.48-க்கும், வணிக பயன்பாட்டிற்காக வாங்குபவர்களுக்கு மட்டும் ரூ.60-க்கும் விற்பனை செய்கிறோம்” என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” ஆவினில் பால் கொள்முதல் விலையை, பசும்பால் லிட்டருக்கு ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.41-லிருந்து ரூ.44-ஆகவும் உயர்த்தப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழக முதல்வர் உயர்த்தியிருக்கிறார்.
இந்த பால் விலையேற்றம் சாதரண மக்களுக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. முழுக்க முழுக்க வாணிப நோக்கத்தோடு விற்பனை செய்யப்படுகிற ஆரஞ்சு நிற பாக்கெட் பாலுக்கான விலை மட்டும்தான் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்குமுன் ரூ.48-க்கு விற்பனை செய்து வந்தோம், இதே நிறைகொழுப்பு பாலை மற்ற மாநிலங்களிலும், மற்ற தனியார் நிறுவனங்களும் ஏறக்குறைய ரூ.70-வரை விற்பனை செய்கின்றனர். பாஜக ஆளுகின்ற குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் விலையைவிட ரூ.10 குறைவாக, அதாவது ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
தமிழகத்தில் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை ஏற்கெனவே 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர். இந்த பாலை சந்தா அட்டைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு அதே விலைதான், அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர்களுக்கு இந்த பால் ரூ.48-க்கும், வணிக பயன்பாட்டிற்காக வாங்குபவர்களுக்கு மட்டும் ரூ.60-க்கும் விற்பனை செய்கிறோம்.
மத்திய அரசு வரலாற்றில் இல்லாத நிகழ்வாக, பாலுக்கும் ஜிஎஸ்டி விதித்துள்ளது. இதனால் விற்பனை விலை உயர்ந்துள்ளது. இருந்தாலும், மக்களை பாதிக்காத வகையில்தான் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.