தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்களில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை மட்டும் 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொள்முதல் விலை உயர்வை காரணம் காட்டி பால் விற்பனை விலையை உயர்த்துவது சந்தர்ப்பவாதம் என்று அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பசும்பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி 35 ரூபாயாகவும், எருமைப்பால் விலையை 3 ரூபாய் உயர்த்தி 41 ரூபாயாகவும் மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள். இந்த விலையேற்றத்தால் விற்பனை விலையில் சாமானிய மக்களை சென்றடையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மட்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதே 46 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும். வணிக ரீதியாக வாங்கும் நபர்களுக்கு மட்டும் 12 ரூபாய் உயர்த்தி 48க்கு பதிலாக 60 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என்று கூறினார். இந்த பால் பாக்கெட்களை 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்திலும் பால் விலை உயர்த்தப்பட்டது. அதை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ரூபாய் வரை குறைத்து நடவடிக்கை எடுத்தார். தற்போது தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவாக தான் இருக்கிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.