பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, புதிய தேர்தலுக்கான பிரசாரத்தில், லாகூரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முதல் பேரணி நடத்தி வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானின் வஷீராபாத்தில் நேற்று மாலை பேரணி நடந்தது. அப்போது இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில், இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து, உடனே அவர் தொண்டர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இம்ரான் கான் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில், இம்ரான் கானை சுட்டதாக கூறப்படும் ஒரு நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட நவீத் முகமது என்பவர் இந்த கொலை முயற்சி குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அது தொடர்பான வீடியோவில், ” நான் இம்ரான் கானைக் கொலை செய்ய தான் பேரணிக்கு வந்தேன். அவர் பேரணியைத் தொடங்கிய அன்றே இதைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார். அதை என்னால் ஏற்றுக் கொல்ல முடியவில்லை. எனக்கு பின்னால் யாரும் இல்லை. நான் சுயமாகவே இந்த முடிவை எடுத்தேன். நான் வஷீராபாத்திற்கு பைக்கில் வந்தேன். என் வாகனத்தை என்னுடைய மாமாவின் கடையில் விட்டுவிட்டு இம்ரான் கானை சுடுவதற்காக பேரணிக்கு வந்தேன்” என வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக இம்ரான் கானின் மூத்த உதவியாளர் ரவூப் ஹசன் செய்தியாளர்களிடம், “இது இம்ரான் கானை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி. அவரை சுட முயன்ற இருவரில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டாவது நபர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.