இஸ்ரேலில் 15 ஆண்டுகள் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக இருந்துள்ளார். இவர் லிகுட் கட்சியைச் சேர்ந்தவராவர். முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி மூலம் நெதன்யாகு பிரதமரானார். பிறகு ஏற்பட்ட குழப்பத்தில் கூட்டணி கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டன.
இதையடுத்து நெதன்யாகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிறகு நப்தாலி பென்னட் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இவர் யாமினா கட்சியை சேர்த்தவர் ஆவர். வழக்கம் போல் கூட்டணிக் கட்சிகள் நப்தாலி பென்னட்டுக்கு வழங்கி வந்த ஆதரவை முறித்துக்கொண்டன.
பின்னர் மீண்டும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி கடந்த 1-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் – யாயிர் லாபிட் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.
இஸ்ரேல் மொத்தம் 120 தொகுதிகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன. தொடர்ந்து பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்தே பெஞ்சமின் நெதன்யாவுக்கும் சாதகமாக இருந்தது.
முன்னதாக அந்நாட்டு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பெஞ்சமின் தான் வெற்றிபெறுவர் என்று கூறப்பட்டு வந்தது. அதன்படி முடிவுகளும் அமைத்தன. இதையடுத்து அவரின் கட்சியினரும், ஆதரவாளர்களும் உற்சாகமடைந்துள்ளனர். மறுபுறம் இது பாலஸ்தீனியர்கள் மற்றும் அருகில் உள்ள அரபு நாடுகளிடையே ஒருவிதமான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த 1948-ம் ஆண்டுமுதல் இஸ்ரேல் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இருக்கிறது. ஆனால் அதன் அருகில் உள்ள பாலஸ்தீனம் அங்கீகாரத்துக்காகப் போராடி வருகிறது. இதனால் அவ்வப்போது கலவரம் ஏற்படும். இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொள்ளவர்கள். இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகளும், பல நேரங்களில் சேதாரங்களும் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது.
இந்த மோதல் சமீபகாலமாக மேலும் வலுவடைந்து வருகிறது. அதாவது இஸ்ரேலில் உள்ள அரபு கட்சிகள் எந்த பிரதமருக்கும் தங்கள் ஆதரவை அளித்ததே இல்லை. பெஞ்சமின் நெதன்யாகு மீதான கோபம் காரணமாக 2019ம் ஆண்டு முதல் முறையாக முன்னாள் ராணுவ தளபதி பென்னிக்கு தங்கள் ஆதரவை அளித்தனர். அப்போது அவர்கள், `பெஞ்சமின் மீண்டும் ஆட்சி அமைக்காமல் தடுக்கவே இந்த முடிவினை எடுத்துள்ளோம்’ என்று தெரிவித்தனர்.
இதனால் தான் விரிசல் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு தேர்வாகியுள்ளதால், பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெஞ்சமின் நெதன்யாகு வெற்றிபெற்றது இந்தியாவுக்கு சாதகமாக அமைத்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். இந்தியாவுக்கும் – இஸ்ரேலுக்குமான உறவு பல ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல நிலையில் நீடித்து வருகிறது. குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் – பெஞ்சமின் நெதன்யாகுவும் தொடர்ந்து இணக்கமாக இருந்து வருகின்றார்கள்.
ராணுவத்திற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதில் இஸ்ரேல் முன்னோடியாக இருக்கிறது. மேலும் இந்தியாவுக்கும் அதில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இதனால் வரும் காலங்களில் ராணுவ ரீதியிலான நட்பு இரு நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.