உம்மை பிரதிபலிக்க என்ன தவம் செய்தேனோ – ரீல் ராஜராஜ சோழன் உருக்கமான ட்வீட்

சோழ மன்னரான ராஜ ராஜசோழனின் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவருகிறது. அவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால் அந்நாளை சதய நாளாக கொண்டாடிவருகின்றனர். இனி ஆண்டுதோறும் ராஜ ராஜ சோழனின் சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்தவகையில் ராஜ ராஜ சோழனின் 1037-வது சதய விழாவை ஒட்டி அவர் கட்டிய வரலாற்று  சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோயில் ரம்யமாக காட்சியளிக்கிறது. ஏராளமான மக்கள் அக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு சற்று கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. அதற்கு காரணம் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படம் வெளியானதுதான். 

அந்தப் படத்தில் சோழர்களின் பெருமையை பற்றி கூறப்பட்டிருந்தது. முதல் பாகத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக (ராஜராஜ சோழனாக) நடித்திருந்தார்.

இந்நிலையில் சதயவிழாவை முன்னிட்டு ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜ ராஜசோழனுக்கு சதய விழா. இவரது புகழையும், பெருமையும் போற்றி, அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து பெருமை கொள்வோம். பொன்னியின் செல்வனாக “ திரையில் உம்மை பிரதிபலிக்க” நான் என்ன தவம் செய்தேனோ” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். 

ராஜராஜ சோழன்தான் பொன்னியின் செல்வன் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக படமானது 500 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. மேலும் படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.