நீர் மேலாண்மையில் கோட்டை விட்டுள்ளதாகவும், திமுக அரசு குடிமராமத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முன் வருமா என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர், “வடகிழக்கு பருவமழை கடந்த 24ஆம் தேதிமுதல் தொடங்கி தற்போது கடந்த 30ஆம் தேதி முதல் சென்னை , வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் திருவள்ளுவர், காஞ்சிபுரம், சென்னை போன்ற மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தேங்கியுள்ள மழைநீரால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை நவம்பர் 5ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தொடர் மழையால் மழை நீரை திமுக அரசு சரியாக கையாளாததால் மக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு என்ற தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்தார். இதனை நாடாளுமன்றத்தில் பாரத பிரதமர் பாராட்டினார். எடப்பாடி பழனிசாமி 2000 ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்ட குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தினார். இதன் மூலம் பாசன கால்வாய், கண்மாய், குளம், ஏரி ஆகியவற்றை தூர்வாரப்பட்டது.
ஆனால் இன்றைக்கு திமுக அரசு நீர் மேலாண்மையில் மிகவும் மோசமாக உள்ளது. மழை நீர் எல்லாம் கடலில் கலக்கும் சூழ்நிலை உள்ளது. இது மிகப்பெரிய வேதனையாகும். இந்த நீரை சேமித்தால் நிலத்தடி நீர் உயரும், கோடை காலங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்பெறும். நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில், நீர் அதிகமான உள்ள இடங்களில் இணைப்பு ஏற்படுத்தி குளங்கள், ஆறுகள், ஏரிகள், ஆகிவற்றை ஏற்படுத்துவது தான் நீர் மேலாண்மை திட்டம் ஆகும்.
கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில், 1,132 கோடி மதிப்பில், 5,586 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டன, அதேபோல் பொதுப்பணித்துறை கண்மாய்கள், உள்ளாட்சி கண்மாய்கள் என நீர் ஆதாரங்கள் தூர்வாரப்பட்டன. கோடை காலங்களில் குடிநீர் பற்றாகுறை இல்லாமல் விவசாயிகளும் பயனடைந்தார்கள்.
நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருந்தது, பயிர் சாகுபடியிலும் முதல் இடத்தில் இருந்து. பாரத பிரதமர் மூலம் பாராட்டை எடப்பாடி பழனிசாமி பெற்றார். குறிப்பாக 120 அடியில் இருந்த நிலத்தடி நீர் குடிமராமத்து திட்டத்தால் 20 அடியில் தண்ணீர் கிடைத்தது. இந்த குடிமராமத்து திட்டத்திற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் திமுக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் விவசாயிகள் வயிற்றில் அடித்து விட்டனர். குடிமராமத்து திட்டம் என்பது நீர் மேலாண்மைக்கு அடித்தளம் ஆகும்.
தற்போது வடகிழக்கு பருவ மழையால் கூடுதலாக நமக்கு 75 சகவீதத்துக்கும் மேல் மழை கிடைக்கும் என்ற தகவல் உள்ளது. ஆனால் திமுக எடுத்த நடவடிக்கை எப்படி பின்விளைவை ஏற்படுத்தப் போகிறது என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நீர் மேலாண்மை திட்டத்தில் கோட்டை விட்ட திமுக அரசு தற்போது பருவமழையால் ஏற்படும் மழை நீரை சேகரிக்க, மீண்டும் குடிமராமத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமா ” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.