ஒரு கருத்துக்காக ஆளுநரை திரும்ப பெற சொல்வது எல்லாம் சரியில்லை – தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி.!

தமிழகத்தில் ஆளும்கட்சியான திமுகவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பொது மேடைகளில் தமிழக ஆளுநர் பேசிய அரசியல் மற்றும் ஏனைய பொதுக்கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது. 

இதையடுத்து, ஜி.யு.போப் திருக்குறளை சரியாக மொழிபெயர்க்கவில்லை என்றும் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாகவும் ஆளுநர் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். இந்தக்கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைக்குள்ளானதால், இதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் கண்டங்களும் வலுத்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து,  கடந்த வாரம் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அனைத்தும் கூட்டாக சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 

“ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசுவதாக இருந்தால் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி அதன் பின்னர் அவருடைய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்.

இதையடுத்து, ஆளுநர் சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் என்று எதைப் பற்றி பேசினாலும் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அபத்தமானதாகவும், ஆபத்தானதாகவும் தான் இருக்கிறது. ஆளுநர் ரவி பாஜக தலைமையை மகிழ்விப்பதற்கு இப்படி பேசுவதாக இருந்தால் தனது பதவியை விட்டு விலகி, இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லட்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திமுக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து, திமுக நாடாளுமன்றக் குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க உள்ளோம். அதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சியின் எம்.பிக்கள் நாளைக்குள் அறிவாலயத்திற்கு வந்து ஆளுநர் தொடர்பான மனுவைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட வேண்டும்” என்று அறிக்கையின் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரப் பயணமாக டெல்லி சென்றார். இதையடுத்து, நேற்று காலை 10.50க்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட தமிழக ஆளுநர் இன்று இரவு 8.30 மணியளவில் மீண்டும் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட காரணங்களுக்கானப் பயணம் என்றுத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ஆளுநரைத் திரும்பப்பெறும் கையெழுத்து மனு குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

“ஆளுநர் தனது கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. ஆளுநரின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அதற்கு மாறாக எதிர்க்கருத்து சொல்லலாம். ஆனால் கருத்துச் சொன்னார் என்பதற்காகவே ஆளுநரைத் திரும்பப் பெறக் கோருவது ஏற்க முடியாத ஒன்று. 

இந்த பூமியில் பிறந்த அனைவருக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் இருக்கிறது. அதேபோல், அவர் கருத்தை அவர் சொல்லுகிறார். அவர் கருத்துச் சொன்னால், இது எங்கள் கருத்து இல்லை என்றுச் சொல்லுங்கள்.

ஒரு கருத்துச் சொன்னார் என்பதற்காகவே ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்றுச் சொல்வது எல்லாம் சரியல்ல. கையெழுத்தாகி ஒன்றும் ஆகப்போவது இல்லை. நாமும் ஒன்று நடத்துவோம் என்று நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் தேவை இல்லாதது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.