ஓப்பனிங் நல்லா இருக்கு, பினிஷிங் எப்படி இருக்கும்? ஸ்டாலினுக்கு இன்னொரு டெஸ்ட்!

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த வேகத்திலேயே சென்னையை பலமாக பதம் பார்த்துவிட்டது. இரவு பகல் பாராமல் தலைநகரில் முகாமிட்டு ஊத்திவிட்டு இன்று பகலில் சற்று ஓய்வு எடுக்கிறது பெருமழை.

ஒரு மணிநேரம் இடைவெளியில்லாமல் பெய்தாலே சென்னையின் பல பகுதிகள் தீவுகளாகிவிடும். லாரி டியூப்களையும், ரப்பர் படகுகளையும் சாலைக்கு கொண்டு வந்து சிலர் போட்டோ, வீடியோ ஷூட் நடத்திவிடுவார்கள். ஆனால் நான்கு நாள் அடித்து பெய்த போதும் அப்படியான சம்பவங்கள் நிகழவில்லை.

மழைநீர் வடிகால்களை சென்னை முழுவதும் கிட்டதட்ட அத்தனை தெருக்களிலும் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டன. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் பல இடங்களில் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. சில இடங்களில் தொடங்கி முடிக்கப்படாமல் உள்ளன.

நிறைவுபெற்ற பகுதிகளில் மழைநீர் தேங்காமல் முறையாக வடித்து மக்களை நிம்மதியடையச் செய்தது. நிறைவடையாத, தொடங்கப்படாத பகுதிகளில் மழைநீர் வழக்கம் போல் தேங்கின. ஒன்றிரண்டு சுரங்கப்பாதைகளும் நீச்சல் குளங்களாக மாறின. ஆனால் அதிகாரிகளும், அமைச்சர்களும், மாநகராட்சி நிர்வாகமும் ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.

இதன்மூலம் தமிழக அரசு தன் மீது பெரிய புகார் எழாமல் தப்பியது, மக்களும் இந்த பருவமழையை எளிதாக கடந்துவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் துரிதமாக இருந்ததாலேயே சென்னை இந்த நான்கு நாள்கள் மழையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால் பருவமழை இப்போது தான் தொடங்கியுள்ளது. இன்னும் இரு மாதங்கள் முழுதாக உள்ளன. டிசம்பர் முடியும் வரை ரிலாக்ஸ் மூடுக்கு சென்றுவிட முடியாது.

வடிகால் பணிகள் முடிவடையாத இடங்களில், சமீபத்தில் பணிகள் நிறைவடைந்த இடங்களில் அதிகாரிகளும், அமைச்சர்களும் தொடர் கவனம் செலுத்த வேண்டும். நாள்கள் செல்ல செல்ல பணியில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது. கழிவுநீர் வடிகால்களில் அடைப்பு எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவையும் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

வடிகால்கள் சிறப்பாக அமைக்கப்பட்டாலும், சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. சென்னையின் சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமான நிலையில் உள்ளன. வடிகால் அமைக்கும் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டன, மழை காரணமாகவும் பல இடங்களில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. குண்டும் குழியுமான சாலைகளால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பருவமழை முடிந்த உடன் தமிழக அரசு சாலைகள் அமைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும்” என்றும் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.