கடந்த ஆண்டு ஏற்பட்ட அளவிற்கு, இந்த ஆண்டு பாதிப்பு இல்லை! கொளத்தூரில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் நேரு தகவல்

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை பாதிப்பு அளவுக்கு தற்போது பாதிப்பு இல்லை என கொளத்தூரில் ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் பார்வையிட்டு தொடங்கி வைக்கப்பட்டது.  அதிமுக கடந்த 10 ஆண்டுகளில்  எந்த பணியும் செய்யாததால் தான் மழைநீர் தேங்கியது. திமுக செய்ததால் தான் மழைநீர் தேங்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க பல்லாயிரம் கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில், பருவமழை தொடங்கி உள்ளதால், பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த அக்டோபர் மாதம் 30ந்தேதி முதல் பெய்து வந்த பெய்த கனமழையால் சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதந்தது. ஆனால், சென்னை மேயர் உள்பட அதிகாரிகள் இரவோடு இரவாக களத்திற்கு வந்து, மழைநீர் அகற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியதால், வடசென்னை தவிர மற்ற பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றாலும், வடசென்னையில் உள்ள முக்கிய பாலமான கணேசபுரம் ரயில்வே பாலம் மழைநீரில் மூழ்கியதுடன், முதல்வரின் கொளத்தூர் தொகுதிகள் உள்பட பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 4 இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான  மருத்துவ முகாம்களை அமைச்சர்கள், கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர். அதன்பின் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் நேரு,   நேற்று இரவு முதல் பெய்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. புதிதாக கால்வாய் கட்டாத பகுதியிலும் ஏற்கனவே உள்ள பகுதியிலும் நின்ற மழைநீரை மின்மோட்டார் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. சேரும் சகதியும் கூட அகற்றப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட அளவிற்கு, தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை தி.மு.க. சார்பில் மருத்துவ முகாம்கள் 4 இடங்களில் நடக்கிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீர் முழுமையாக அகற்றும் பணி முடிந்தவுடன் சென்னை முழுவதும் சாலைகள் சீரமைக்கப்படும். இதற்காக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார்.

முதல்-அமைச்சர் 1000 கி.மீ தொலைவிற்கு மழை நீர் கால்வாய் பணிகளை செய்ய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் தென் சென்னை, மத்திய சென்னை பகுதியில் அறவே தண்ணீர் தேங்கவில்லை. வட சென்னையில் கொளத்தூர், திரு.வி.க.நகர் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதுவும் ஓட்டேரி கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மழைநீர் தேங்கியது. கொளத்தூர் கன்னித்தீவு போல இருப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது வேறு நினைவை ஏற்படுத்துகிறது. அவர் போகிற கன்னித்தீவு வேறு. அவர் கட்சியில் தான் இருப்பதை காட்டிக்கொள்ளவே இது போன்று பேசுகிறார்.

மழைநீர் கால்வாய் பணிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பிள்ளையார் சுழி போட்ட தாக கூறுவது தவறு.  கடந்த 10 வருடமாக அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளாததால் தான் சென்னையில் மழைநீர் தேங்கியது. அவர்கள் அந்த பணியை செய்திருந்தால் எப்படி தண்ணீர் தேங்கி நிற்கும். தூர்வாரும் பணியை செய்யாததால்தான் சென்னை பாதித்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க மழைநீர் வடி கால்வாய்க்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார். நிதி ஒதுக்கி செயல்படுத்தியது யார் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள் செய்கிறோம்… செய்கிறோம்… என்றார்கள். ஆனால் கடைசி வரை செய்யவில்லை. அதிமுக எந்த பணியும் செய்யாததால் தான் மழைநீர் தேங்கியது. திமுக செய்ததால் தான் மழைநீர் தேங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.