ஊட்டி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊட்டி இளைஞர் மணிகண்டன் இந்தியாவில் 272 நாட்களில் 12800 கி.மீ தூரம் சைக்கிள் பயணம் செய்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள பெங்கால்மட்டம் கோத்திபென் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர் பிகாம் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். குடிசை மாற்று வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட இவர், சைக்கிள் மூலம் இந்தியா முழுவதையும் சுற்றிவர வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 4ம் தேதி ஊட்டியில் இருந்து நீண்ட தூர சைக்கிள் பயணத்தை தொடங்கினார். 272 நாட்களில் 12 ஆயிரத்து 800 கிமீ தொலைவை சைக்கிள் மூலம் கடந்து நேற்று மீண்டும் ஊட்டியை வந்தடைந்தார். அவருக்கு நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது குறித்து மணிகண்டன் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை நாட்டு மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நாடு முழுவதும் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எனது பயணத்தை ஊட்டியில் தொடங்கினேன். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சைக்கிளை இயக்கினேன். இரவு நேரங்களில் பெட்ரோல் பங்க் அல்லது கோயில் போன்ற இடங்களில் கூடாரம் அமைத்து தங்கிக் கொண்டேன். காலையிலிருந்து மாலை வரை சைக்கிளை இயக்கினேன்.
ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் வரை ஓட்டினேன். கன்னியாகுமரி, சென்னை, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் என பயணித்து இந்தியாவின் கடைசி கிராமமான மனாவை அடைந்தேன். அங்கிருந்து ஆக்ரா, ராஜஸ்தான், குஜராத், கோவா, கேரளா வழியாக நீலகிரிக்கு திரும்பினேன். 272 நாள் சைக்கிள் பயணத்தில் 12 ஆயிரத்து 800 கிமீ பயணம் மேற்கொண்டேன். இந்த பயணத்தில் சில முறை சைக்கிள் பழுதானது. 5 டயர்களையும், 8 முறை டியூப்களையும் மாற்றியுள்ளேன். இவ்வாறு மணிகண்டன் கூறினார்.