புதுடெல்லி: செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர் தீவிரவாதிக்கு விதித்த மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி டெல்லி செங்கோட்டைக்குள் தீவிரவாதிகள் சிலர் புகுந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்கிற அஷஃபக் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. தண்டனைக்கு எதிராக முகமது ஆரிஃப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 2011, அக்டோபர் 10-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முகமது ஆரிஃப் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பேலா எம்.திரிவேதி ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், “மனுதாரரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங் கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சீராய்வு மனுவை நிராகரிக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.