சேலம், கோரிமேடு பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் பூபதி. பிரபல ரெளடியான இவர் நேற்று முன்தினம் இரவு அழகாபுரத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பவரிடம், கோரிமேட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த கும்பல் ஒன்று இருவரையும் சரமாரியாக தாக்கி காரில் கடத்தி சென்றுள்ளனர். இதில், பிரவீன் குமார் சிறு தூரத்திலேயே காரில் இருந்து குதித்து தப்பித்தார்.
பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன் குமார் அழகாபுரம் போலீஸாரிடம் அளித்த தகவலின் அடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா இரண்டு தனிப்படை அமைத்தார். அதன்மூலம் அந்த இரண்டு தனிப்படையினரும் பூபதி திருவண்ணாமலை அருகே இருப்பது கண்டறியப்பட்டு அங்கு விரைந்து சென்றனர். அப்போது கடத்தல் கும்பல் போலீஸார் நெருங்கி வருவதை அறிந்ததும், கீழ்பெண்ணத்தூர் பகுதியில் பூபதியையும், அவர்களது காரையும் அங்கேயே விட்டு விட்டு தப்பியது. நேற்று இரவு தனிப்படை போலீஸார் பூபதியை காருடன் மீட்டனர். பின்னர், அவரை சேலத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் , சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல நகைக் கடையான செல்வமாளிகையின் உரிமையாளர் ஏகாம்பரம் ஆள் வைத்து கடத்தியதாக கூறியுள்ளார். காரணம், சமீபத்தில் ஏகாம்பரத்திற்கு சொந்தமான நிலம் வீராணத்தில் இருந்ததாகவும், அந்நிலத்தின் மதிப்பு 12 கோடி ரூபாய் இருக்கும் என்றும், அதனை விற்று தருவதாக கூறி நகைக்கடையின் உரிமையாளரிடம் இருந்து அசல் பத்திரத்தை பூபதி வாங்கி சென்றுள்ளார். ஆனால் நிலத்தை விற்று தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஏகாம்பரம் பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால், பூபதி பத்திரத்தை தர மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நகைக் கடை உரிமையாளர் ஏகாம்பரம், தனது கடையின் மேலாளர் பாபுவின் மூலம் அன்னதானப்பட்டி பிரபாகரன் எனும் பிரபல ரெளடி மூலம் ஒரு கூலிப்படை கும்பலை சேர்த்து பூபதியை கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் மூலம் கடத்தப்பட்ட பூபதி பல்வேறு மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், நகைக் கடை உரிமையாளர் ஏகாம்பரம் மற்றும் மேலாளர் பாபு கூலிப்படையுடன் சேர்ந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறி மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கடத்தலுக்கு உதவிகரமாக இருந்த கூலிப்படை கும்பலை போலீஸார் வலை விரித்து தேடி வருவதுடன், தன்னை பத்திரிகையாளர் என்று கூறி வலம் வந்த பிரவீன் குமார் தலைமறைவாக இருப்பதாகவும், அவருக்கும் பிரபல ரெளடிக்கும் என்ன தொடர்பு என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.