தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபுரம் பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சந்தித்தனர். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்சிற்கு சால்வை அணிவித்தும், மலர் கொத்து கொடுத்தும் வாழ்த்து பெற்றனர். பின்னர் நிர்வாகிகள் அனைவரையும் ஓபிஎஸ் வரவேற்று பேசினார்.
அப்போது பேசிய கோவை செல்வராஜ், அதிமுக தொண்டர்கள் நம் பக்கம் தான் இருக்கின்றனர். இன்னும் நிறைய பேர் வர விரும்புகின்றனர். ஆனால் சில நெருக்கடிகளால் அந்த பக்கம் தவித்து கொண்டிருக்கின்றனர். நம்முடைய கூட்டத்தை பார்த்து ஒட்டுமொத்த தொண்டர்களும், நிர்வாகிகளும் நம் பக்கம் வருவார்கள். தற்போது வந்தால் தான் கட்சியில் அண்ணனுடன் இருக்க முடியும்.
இதன்பிறகு வருபவர்கள் உங்களுக்கு அப்புறம் தான் என்பதை மறந்துவிட வேண்டாம். ஒவ்வொரு ஒன்றியமாக, மாநகரமாக, மாவட்டமாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். வரும் டிசம்பர் முதல் வாரத்தில் கோவை சாஸ்திரி மைதானத்தில் 5 ஆயிரம் பேரை திரட்டி முதல் செயல் வீரர்கள் கூட்டமானது
வழிகாட்டுதலின்படி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், சுயநலத்திற்காக கட்சி விதிகளை சிலர் திருத்தம் செய்துள்ளனர். தொண்டர்கள் கூட கட்சி தலைமை பதவிக்கு வரலாம் என்ற எண்ணத்தில் எம்.ஜி.ஆர் கட்சி விதிகளை உருவாக்கினார். இதன் காரணமாக ஓபிஎஸ் முதல்வராகவும், ஈபிஎஸ் முதல்வராகவும் வர முடிந்தது.
ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் வர முடிந்தது. இத்தகைய விதிகளை யாரும் திருத்தக் கூடாது. கட்சி தலைமை பொறுப்பிற்கு போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். வழிமொழிய வேண்டும். அவர் 5 ஆண்டுகாலம் கட்சியின் தலைமை கழக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று சொன்னால்,
மிட்டா மிராசுதாரர்கள் மட்டுமே தலைமை பொறுப்பிற்கு வரக்கூடிய நிலை உருவாகும் என்று கூறினார். அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். சரியான பாதையில் சென்றால் தான் ஊர் வந்து சேர முடியும் என்பது போல, ஒற்றுமையாக செயல்பட்டு தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டுக் கொண்டார்.