புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு 450 ஏக்யூஐ-க்கும் (Air Quality Index) அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று முதல்வர் அர்விந்த் கேர்ஜிவால் வலியுறுத்தி உள்ளார். அத்துடன், 10 லட்சம் கட்டிடப் பணியாளர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையும் அறிவித்துள்ளார்.
ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. 201 முதல் 300 அளவுக்கு சென்றால், காற்றில் மாசு அதிகம். 301 முதல் 400 வரை மிக அதிகம். 401 முதல் 500 ஏக்யூஐ என்பது மிகவும் மோசமான காற்று மாசு என்று அளவிடப்படுகிறது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான காஜியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அளவு(ஏக்யூஐ) 450-க்கும் அதிகமான அளவில் தொடர்கிறது. பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு காற்று மாசடைந்து வருகிறது. இதற்கு 51% போக்குவரத்து வாகனங்கள் காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு கொண்டு வந்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக பொதுமக்கள் அனைவரும் கரோனா பரவல் காலத்தை போல், தங்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். காற்று மாசு மோசமான நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கட்டிடப் பணிகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் பாதிக்கப்படும் கட்டிடப் பணியாளர்களில் 10 லட்சம் பேருக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை அளிப்பதாக முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். இத்திட்டத்துக்காக டெல்லி அரசு ரூ.500 கோடி செலவிட தயாராகி விட்டது.
இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறும்போது, ‘‘வீட்டில் இருந்து பணி செய்ய முடியாதவர்கள், அரசு பொது வாகனங்களை பயன்படுத்த வேண்டும். டெல்லியின் 13 பகுதிகள் அதிக காற்று மாசு படிந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைக் குறைக்க, அங்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பாய்ச்ச உத்தரவிடப்பட்டுள்ளது. குளிரை விரட்ட பொதுவெளியில் விறகு, கரிகளால் தீயை பற்ற வைக்கக் கூடாது’’ என்றார்.
மேலும், காற்று மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மீறும் செயல்களை கைப்பேசிகளில் படம், வீடியோ எடுத்து ‘கிரீன் டெல்லி’ இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. காற்று மாசுவின் பாதிப்பு குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும் என்பதால், டெல்லியின் தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பிலும் ஒரு பரிந்துரை வெளியாகி உள்ளது. இதுகுறித்து டெல்லி தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘மாநிலத்தின் காற்று மாசு நிலை சரியாகும் வரை அனைத்து பள்ளிகளையும் மூடுவது சரியாக இருக்கும்’’ என கூறப்பட்டுள்ளது. இதே கருத்தை, டெல்லி மாநில பாஜக.வும் முதல்வர் கேஜ்ரிவாலிடம் வலியுறுத்தி உள்ளது.
காற்று மாசு அதிகரிக்க ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய அண்டை மாநில விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதும் காரணமாக உள்ளது. இப்பிரச்சினையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே அரசியல் ரீதியான மோதலும் ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி அரசு வைகோல் எரிப்பை தடுக்க விவசாயிகளுக்கு மானியம் அறிவித்துள்ளது. இதற்காக, மத்திய அரசு நிதியுதவி அளிக்க மறுப்பதாகவும், வேளாண் சட்டங்களை எதிர்த்து இவர்கள் போராடியதால் மத்தியில் உள்ள பாஜக அரசு நிதியுதவி மறுப்பதாகவும் ஆம் ஆத்மி புகார் கூறியுள்ளது.
அதற்கு பாஜக பதில் அளிக்கையில், ‘‘டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்த ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது’’ என்று புகார் கூறி வருகிறது. டெல்லி பாஜக மூத்த தலைவரும் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சருமான பூபேந்தர் யாதவ் கூறும்போது, ‘‘இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு வைக்கோல் எரிப்பால் 32% காற்று மாசுபட்டுள்ளது. கடந்த ஆண்டு வைக்கோல் எரிப்பு ஹரியாணாவில் 30.9% குறைந்தாலும், பஞ்சாபில் 19% அதிகரித்தது. இதன்மூலம், டெல்லியில் காற்று மாசுக்கு காரணம் யார் என்பது புரியும்’’ என்றார்.
கடந்த 2016-ல் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு வந்தபோது, காற்று மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்த டெல்லி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதற்காக அந்த ஆண்டு ஒற்றைப் படை மற்றும் இரட்டைப் படை எண்கள் கொண்ட வாகனங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்த தடையை மீண்டும் விதிக்க காற்று மாசு அளவு 500-ஐ எட்டினால்தான் செய்ய முடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டிடப் பணிகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்படும் கட்டிடத் தொழிலாளர்கள் 7 லட்சம் பேருக்கு கடந்த ஆண்டு டெல்லி அரசு ரூ.350 கோடி செலவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.