தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதில், அதிகபட்சமாக தஞ்சாவூரில் 177.50 மி.மீ மழை பதிவானது. மேலும், நெய்வாசல் 73, வல்லம் 40, குருங்குளம் 35 என மாவட்டம் முழுவதும் 409.90 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்த தொடர்மழை காரணமாக தஞ்சாவூர் அருகே குளிச்சப்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழைநீர் வடிய தாமதம் ஏற்பட்டுள்ளதால் நடவு செய்யப்பட்ட வயல்கள் அனைத்தும் குளம்போல காட்சியளிக்கின்றன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: குளிச்சப்பட்டு, கத்தரிநத்தம், வாழமரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், வடிகால் வாய்க்கால்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாரப்படாமல் உள்ளதால், தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்து வருகின்றன. எனவே, வடிகால்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர்.
இந்நிலையில், கனமழையால் குளிச்சப்பட்டு பகுதியில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.