புதுடெல்லி: ‘தவறு செய்திருந்தால் எதற்கு சம்மன் அனுப்ப வேண்டும். முடிந்தால் வந்து என்னை கைது செய்யுங்கள்,’ என்று அமலாக்கத்துறைக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சவால் விட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முறைகேடு தொடர்பான நிதி பரிமாற்ற மோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ராவும், மேலும் 2 பேரையும் அமலாக்கத்துறை சமீபத்தில் கைது செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு ஆஜராகும்படி முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால், ஹேமந்த் சோரன் நேற்று அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல், சட்டீஸ்கரில் நடந்த பழங்குடியினர் விழாவில் பங்கேற்ற சென்றார். முன்னதாக, தனது இல்லத்தில் கூடியிருந்த கட்சியினர் மத்தியில் பேசிய அவர், ‘விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்புவதற்குப் பதிலாக, நான் குற்றம் செய்திருந்தால் வந்து என்னை கைது செய்யுங்கள். முடிந்தால் அதை செய்யுங்கள். எனக்கு பயமோ, கவலையோ இல்லை. மாறாக, நான் பலமாக வளர்ந்து வருகிறேன்,’ என சவால் விட்டார்.