இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் தீபாவளிக்கு மறுநாள் தோன்றியது. அதேப்போல் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8ம் தேதி நிகழ இருக்கிறது.
சந்திர கிரகணத்தின்போது சந்திரன் பகுதி சிவப்பு நிறத்தில் தோன்றும். எனவே, இது ‘பிளட் மூன்’ (blood moon) என்றும் அழைக்கப்படுகிறது. நிபுணர்கள் கூற்றின்படி நவம்பர் 8ம் தேதி நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும்.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் நிகழ்கின்றது. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சராசரியாக, ஆண்டுக்கு 4 கிரகணங்கள் வரை நிகழும்.
அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது.. முழு சூரிய கிரகணம் என்றும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது.. பகுதி சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
நிலவு மீது விழும் சூரிய ஒளியை பூமி முற்றிலும் தடுக்கிறது. இது முழு சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், வரும் நவம்பர் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது.
கடைசியாக முழு சந்திர கிரகணம் மே 15, 2022ம் தேதி நிகழ்ந்தது. அதே சமயம் சமீபத்திய சூரிய கிரகணம் அக்டோபர் 25, 2022 அன்று காணப்பட்டது. பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்த 15 நாட்கள் கழித்து முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. மீண்டும் முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும் என்று நாசா தெரிவித்து இருக்கிறது.
முழு சந்திர கிரகணம் நவம்பர் 8 செவ்வாய்க் கிழமை நிகழ உள்ளது. மத நம்பிக்கைகளின்படி, கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது. எனவே
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 8ம் தேதி காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7. 20 மணிக்கு திறக்கப்படும். 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது.
இதையடுத்து விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி தரிசனம், ரூ.300 கட்டண தரிசனத்துக்கு நேர ஒதுக்கீடு, சர்வதர்ஷன், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவைகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
இதேப்போல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கிரகணம் முடிந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே வைகுண்ட வளாகம் 2ல் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமையல் செய்யமாட்டார்கள்.
அதனால் அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும். இதனால் திருப்பதிக்கு வருகிற பக்தர்கள் இதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டு இருக்கிறது.