நேற்று, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை கடந்த 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டுக்கான தரவரிசை குறியீட்டை வெளியிட்டது.
அந்த பட்டியலில், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10 வரிசைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், மொத்தம் உள்ள 1,000 புள்ளிகளில் 950-க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிலை 1 என்ற மிக உயரிய மதிப்பைப் பெற்றுள்ளன.
இந்த தரவரிசைக் குறியீட்டில், தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகியவை 855 மற்றும் 897 புள்ளிகளோடு 3-வது நிலையில் உள்ளன. இதில் தமிழகம், கற்றல் வெளிப்பாடுகள் பிரிவில் 132 புள்ளிகளும், அணுகல் பிரிவில் 78 புள்ளிகளும், உள்கட்டமைப்பு வசதிகளில் 131 புள்ளிகளும், சமத்துவம் பிரிவில் 183 புள்ளிகளும், அதிகபட்ச புள்ளியாக ஆளுகை நடைமுறை பிரிவில் 331 புள்ளிகளும் பெற்றுள்ளது.
இதையடுத்து, புதுச்சேரி மாநிலம் கற்றல் வெளிப்பாடுகளில் 124 புள்ளிகளும், அணுகலில் 76 புள்ளிகளும், உள்கட்டமைப்பு வசதிகளில் 134 புள்ளிகளும், சமத்துவப் பிரிவில் 220 புள்ளிகளும், ஆளுகை நடைமுறையில் 343 புள்ளிகளும் பெற்றுள்ளது.