பாக்., மாஜி பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கி சூட்டில் காயத்துடன் தப்பினார்| Dinamalar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பட்டப்பகலில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில், அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 70, காலில் காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக, ஆகஸ்ட் 2018 முதல் ஏப்., 2022 வரை இருந்தவர் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் கேப்டனான இவர், 2022 ஏப்.,ல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் தோல்வியடைந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

பாகிஸ்தான் பார்லிமென்டுக்கு, 2023 ஆகஸ்டில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக தேர்தலை நடத்த வலியுறுத்தி, இம்ரான் கான் கட்சி சார்பில் பேரணி நடத்தப்படுகிறது.
இதன்படி, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் செல்லும், இந்தப் பேரணி நேற்று பஞ்சாப் மாகாணத்தின் வாசிராபாதை நேற்று அடைந்தது.
அப்போது, ‘கன்டெய்னர்’ பொருத்தப்பட்ட லாரியில் நின்றபடி, கட்சியினர் இடையே இம்ரான் கான் பேசிக் கொண்டிருந்தார். அந்த லாரி அருகே வந்த ஒரு மர்ம நபர், கண்ணிமைக்கும் நேரத்தில், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில், இம்ரான் கானின் காலில் குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அவரை அவருடைய பாதுகாவலர்கள் கன்டெய்னருக்குள் அழைத்துச் சென்றனர்.

அங்கு குழுமியிருந்த கட்சியினர், அந்த மர்ம நபரைப் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரு எம்.பி., உள்பட மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த இம்ரான் கான் உடனடியாக சிகிச்சைக்காக லாகூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடைய காலில் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். இம்ரான் கானை கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் அக்கட்சியினர் கூறியுள்ளனர்.


இந்த சம்பவத்துக்கு, அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. துப்பாக்கியால் சுட்டவர் பெயர் நவீத் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ‘நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதால், இம்ரான் கானை கொல்ல முயன்றேன்’ என, அந்த இளைஞர் கூறியதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘உன்னிப்பாக கவனிக்கிறோம்’

இந்த சம்பவம் குறித்து நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பகிச்சி கூறியதாவது:இந்த சம்பவம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பாகிஸ்தானில் அடுத்து நடக்கும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கவனிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.