புதுச்சேரியில் ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்வின் பலன் இதுதான்: உதாரணத்துடன் விவரித்த தமிழிசை

புதுச்சேரி: “மக்கள் சந்திப்பை அரசியல் ஆக்காமல், அவசியத்திற்காக நல்ல மனது படைத்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இரண்டாவது முறையாக துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. முதல் முறையாக கடந்த மாதம் 8-ம் தேதி ‘மக்கள் சந்திப்பு’ தொடங்கியபோது தனது போக்குவரத்துக்கு உதவியாக மூன்று சக்கர கைவண்டி வழங்கி உதவுமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்த புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு காரைக்கால் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மூன்று சக்கர கைவண்டி வழங்க ஆளுநர் நடவடிக்கை எடுத்தார். இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மண்ணாடிப்பட்டு, குமராபாளையத்தைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் மூன்று சக்கர கைவண்டியை ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: “சென்ற முறை மக்கள் சந்திப்பின்போது ஒரு மாற்றுத்தினாளி பெண் தனக்கு வேலை வேண்டும் என்று கேட்டார். அதோடு மூன்று சக்கர வாகனம் கேட்டிருந்தார். அவருக்காக மூன்று சக்கர வாகனம் ஏற்பாடு செய்வதாக கூறி இருந்தேன். மாரியப்பன் அதற்கான ஏற்பாட்டை செய்திருந்தார். அவரை நான் பாராட்டுகிறேன். அதனை அவர் பெண்ணாக இருப்பதால் ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் முருகன் என்பவருக்கு அது வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மக்கள் சந்திப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் ஏற்பாடு செய்து அந்தப் பெண்ணுக்கு தரப்படும். இதுதான் மக்கள் சந்திப்பின் பலன்.

ஏன் மக்களை சந்திக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தார்மிக் உரிமை இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் மக்களை சந்திக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு இந்த செயல்தான் எனது பதில். ஏனென்றால் இதுபோல மக்களை சந்திக்கும்போது அவர்களது சிறிய சிறிய தேவைகளை நமது நோக்கத்தினால், நமது முயற்சியினால் ஓரளவுக்கு செய்ய முடியும் என்பதுதான். இது மட்டுமல்ல, எங்களால் உடனே சரி செய்துவிடக் கூடிய இன்னும் பல கோரிக்கைகளை உடனே சரி செய்திருக்கிறோம். ஜிப்மர் உதவி கேட்டிருந்தார்கள், அதனை செய்திருக்கிறோம். மக்கள் சந்திப்பை அரசியல் ஆக்காமல் அவசியத்திற்காக, நல்ல மனது படைத்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

நல்லது யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடரும். மக்கள் சந்திப்பு அரசியல் கிடையாது, அவசியம் என்பதை நான் பதிவு செய்கிறேன். அதேபோல மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நேற்று முதல்வர் தலைமையில் கூட்டம் போட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறார்கள். அதனால் புதுச்சேரி எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துகிறேன். பொதுமக்கள் மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாந்தி, பேதி அறிகுறிகள் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும். விஷப் பூச்சிகள் அதிகம் வரும். எச்சரிக்கையாக இருக்க் வேண்டும்.

குழந்தைகளை கையாளும்போது இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையாக இருந்தால் இந்த மழை நாளில் வரும் பாதிப்புகளை நம்மால் தடுக்க முடியும்” என்று தமிழிசை கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.