முதல்வர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி… குஜராத்தில் முதல் ஆளாக குதித்த கெஜ்ரிவால்!

Gujarat Assembly Elections : 2024 மக்களவை தேர்தலுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படும் குஜராத் சட்டப்பேரவையின் தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக அடுத்தாண்டு தொடக்கத்தில்தான் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், ஆனால் வழக்கப்படி அடுத்த மாதமே தேர்தல் நடைபெற இருக்கிறது.

டிசம்பர் 1, 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தை ஆட்சி செய்துவரும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியவைக்கு ஈடாக ஆம் ஆத்மி கட்சியும் கடந்த ஓராண்டாக அங்கு களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறது. 

அந்த வகையில், அவ்விரு கட்சிகளையும் தாண்டி முதல் ஆளாக முதல்வர் வேட்பாளரை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முகமாக பார்க்கப்பட்ட இசுதான் கத்வி தற்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குஜராத்தில் அறிவித்தார். 

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய இணை பொதுச்செயலாளரான கத்வி, ஆரம்ப காலத்தில் ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார். செய்தி தொலைக்காட்சிகளின் முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 40 வயதான கத்வி, கடந்தாண்டு ஜூன் மாதம்தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இவர் ஆம் ஆத்மி கட்சிக்காக தனது பணியையும் துறந்துவர் எனக்  கூறப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தை அடுத்து, குஜராத்தையும் கைப்பற்ற இலவச கல்வி, இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை என பல்வேறு வாக்குறுதிகளையும் கெஜ்ரிவால் அள்ளி வீசி வருவது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.