சியோல்: வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதையடுத்து ஜப்பான், தென் கொரிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சியோல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பியோங்கியாங்கின் சுனான் பகுதியிலிருந்து வியாழக்கிழமை காலை 7.40 மணியளவில் கிழக்கு கடல் பகுதியிலிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தி வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. அதன்பிறகு, குறுகிய கால இடைவெளியில் அந்த நாடு குறுகிய இலக்குகளை சென்று தாக்கும் 2 ஏவுகணைகளையும் சோதனை செய்துள்ளது. இந்த இரு ஏவுகணைகளையும் தெற்கு பியோங்கன் மாகாணம் கெய்சான் பகுதியிலிருந்து காலை 8.39 மணி அளவில் ஏவி அந்த நாடு சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியா 20-க்கும் அதிகமான ஏவுகணைகளை செலுத்தி சோதனையில் ஈடுபட்டதாக செய்திவெளியான மறுநாளில் தொலைதூர மற்றும் குறுகிய தூர இலக்குகளை தாக்கும் மேலும் 3 ஏவுகணைகளை அந்தநாடு சோதனை செய்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை அண்டை நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. வடகொரியாவின் ஒரு ஏவுகணை தென்கொரிய கடற்பரப்புக்கு அருகே விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் தென்கொரிய விமானப் படை இணைந்து இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவிலான பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இரண்டு நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், வடகொரியாவும் ஏவுகணை சோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையையடுத்து, ஜப்பானும், தென்கொரியாவும் தங்களது நாட்டு மக்கள் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளன.