கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காந்தாரா. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்னையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக காந்தாரா வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர், சப்தமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாக படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி காந்தாரா தமிழில் டப் செய்யப்பட்டும் சமீபத்தில் வெளியானது. படத்தை பார்த்த தமிழ் ரசிகர்களும் மிகப்பெரிய வரவேற்பை படத்துக்கு கொடுத்துள்ளனர். குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பிரமிப்பாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டும்வருகின்றனர். மேலும், நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதையையும் பலர் பாராட்டிவருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் ரிஷப் ஷெட்டி சந்தித்து பேசி ஆசி பெற்றுக்கொண்டார். நீண்ட நேரம் ரிஷப்புடன் உரையாடிய ரஜினிகாந்த் இந்தியாவின் மிகச்சிறந்த படம் காந்தாரா என்று புகழ்ந்தார். அதேபோல், காந்தாரா திரைப்படத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், காந்தாரா சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.நமது செழுமையான பாரம்பரியங்களை படம் பிடித்துக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கும் அவர் பாராட்டு தெரிவித்திருந்தார். இப்படி பலரும் படத்தை வெகுவாக பாராட்டிவருகின்றனர்.
இந்நிலையில் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா படத்தின் மொத்த வசூல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் மிரள செய்திருக்கிறது. அதாவது 300 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை படைத்துவருகிறது. கடந்த இரண்டாம் தேதிவரை (படம் வெளியாகி 33 நாட்களில்) உலகம் முழுவதும் மொத்தம் 305 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தொடர்ந்து இந்த படத்திற்கு திரையரங்குகளில் வரவேற்பு கிடைப்பதால் காந்தாரா திரைப்படம் விரைவில் 350 கோடி ரூபாயை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.