டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தச் சுற்றின் இன்றைய போட்டியில் அயர்லாந்தும் நியூசிலாந்தும் மோதியிருந்தன. இந்தப் போட்டியை நியூசிலாந்து அணி ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஏறக்குறைய அரையிறுதியை உறுதி செய்திருக்கிறது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது. ஃபின் ஆலன் ஓப்பனிங்கில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். இதன்பிறகு, கான்வேயும் வில்லியம்சனும் நிதானமாக நின்று ஆடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். கான்வே அவுட்டான பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. ஆயினும் வில்லியம்சன் மட்டும் நின்று ஆடி அரைசதத்தைக் கடந்தார். கடைசிக் கட்டத்தில் நியூசிலாந்து அணி கொஞ்சம் தடுமாறியது. ஜோஷூவா லிட்டில் எடுத்த ஹாட்ரிக்கே நியூசிலாந்தின் தடுமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. 200 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து 185 ரன்களை மட்டுமே எடுத்தது.
அயர்லாந்து 186 ரன்களை சேஸ் செய்யத் தொடங்கியது. பால்பிரினியும் ஸ்டிர்லிங்கும் அந்த அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்திருந்தனர். பவர்ப்ளேயில் அயர்லாந்து அணி விக்கெட்டே விடவில்லை. பவர்ப்ளே முடிந்த பிறகு ஸ்பின்னர்கள் வந்தவுடன் பால்பிரினியும் ஸ்டிர்லிங்கும் அட்டாக் செய்யத் தொடங்கினர். சாண்டன்ரின் ஓவரில் 13 ரன்களும் சோதியின் ஓவரில் 16 ரன்களும் வந்திருந்தது. ஆனால், இந்த அட்டாக்கிங் ஆட்டம் தொடரவில்லை. இதே ஸ்பின்னர்களிடமே பால்பிரினியும் ஸ்டிர்லிங்கும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். சாண்ட்னர் பால்பிரினியையும் சோதி ஸ்டிர்லிங்கையும் வீழ்த்தியிருந்தனர். இதன்பிறகு, அயர்லாந்து பேட்டர்கள் அட்டாக் செய்தே ஆடினாலும் விக்கெட்டுகளும் தொடர்ச்சியாக விழுந்து கொண்டே இருந்தன. 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணியால் 150 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. நியூசிலாந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
நியூசிலாந்து அணி சூப்பர் 12 போட்டிகள் அத்தனையையும் ஆடி முடித்திருக்கிறது. 5 போட்டிகளில் மூன்றில் வெற்றியையும் ஒன்றில் தோல்வியையும் ஒரு போட்டியில் முடிவில்லை என்ற நிலையையும் நியூசிலாந்து எட்டியிருக்கிறது. குரூப் 1-ல் முதலிடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.
ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் தங்களின் கடைசிப்போட்டியில் வெல்லும்பட்சத்திலும் நியூசிலாந்தைவிட ரன்ரேட்டை அதிகம் பெறுவது கடினம்தான். ஆக, நியூசிலாந்து அரையிறுதியில் ஒரு காலை வைத்துவிட்டது என்றே சொல்லலாம்!