ஹைதராபாத், தன் நான்கு ஆடுகளை மலைப்பாம்பு விழுங்கியதால், வனத்துறையிடம் இழப்பீடு கேட்டவர் மீது, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தெலுங்கானாவில் மன்செரியல் மாவட்டத்தில் உள்ள கவால் என்ற மலைக்கிராமத்தில் வசிப்பவர் பில்லவேணி போஷன்னா. இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். சமீபகாலமாக இவரது ஆடுகள் அடிக்கடி காணாமல் போயின. இதையடுத்து, போஷன்னா உட்பட அவரது குடும்பத்தினர் திருடனை பிடிக்க கண்காணித்து வந்தனர்.
அப்போது ஒரு மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து வந்து ஒரு ஆட்டை பிடித்து விழுங்கியது. அந்தப் பாம்பு தான் ஆடுகளை விழுங்குகிறது என, அவர்கள் கண்டுபிடித்தனர். தகவல் அறிந்து கிராம மக்களும் திரண்டனர்.
அனைவரும் சேர்ந்து அந்தப் பாம்பை கொன்று வயிற்றை கிழித்தனர்; உள்ளே ஆடு இறந்த நிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து தன் நான்கு ஆடுகளை மலைப்பாம்பு விழுங்கியதால், போஷன்னா வனத்துறையிடம் இழப்பீடு கேட்டார். ஆனால், மலைப்பாம்பை கொன்ற குற்றத்துக்காக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், போஷன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனால், போஷன்னா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement