ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநில ஆட்சிகளை கவிழ்க்க சதி நடக்கிறது. இதற்கு பாஜகதான் காரணம் என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் தெலங்கானா பவனில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது:
தெலங்கானாவில் ஆளும் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜகவினர் முயற்சித்த வீடியோ பதிவுகளை பார்க்கும் போது நம்நாட்டின் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டதைப் போல் உணர்ந்தேன். இந்த வீடியோ அனைத்து மாநில முதல்வர்கள், நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இந்த வீடியோவை பரிசீலனை செய்து, இதற்கு பின்னால் நடக்கும் சதியை வெளிஉலகிற்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
”ஏற்கெனவே நாங்கள் 8 அரசுகளை கவிழ்த்தோம். விரைவில் ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய 4 மாநில அரசுகளையும் கவிழ்ப்போம்” என்று அந்த 3 பேர் வீடியோவில் கூறியுள்ளனர்.
சுமார் ஒரு மாதம் முன்பு ஹைதராபாத்துக்கு ராமசந்திர பாரதி என்பவர் வந்தார். அவர், பல முயற்சிகளை மேற்கொண்டு எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ரோஹித் ரெட்டியை சந்தித்துள்ளார். பின்னர் விவரங்களை கூறியுள்ளார். இவர்களது சதி திட்டம் குறித்து ரோஹித் என்னிடம் கூறினார். மாநில உள்துறை அமைச்சருக்கு இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னரே பண்ணை வீட்டில் பேரம் பேசிய அந்த 3 பேரும் கைது செய்யப்பட் டனர். ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இணைந்தால் ரூ. 100 கோடி மட்டுமல்ல எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ பதிவில், பேரம் பேச வந்தவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயரை 20 முறையும், பிரதமர் மோடியின் பெயரை 2 முறையும் பயன்படுத்தியுள்ளனர். பி.எல். சந்தோஷ் மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோரின் பெயர்கள் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது. பேரம் பேசிய பின்னணியில் யார் இருந்தார்கள், எம்.எல்.ஏக்களுக்கு தரப்படுவதாக தெரிவித்த கோடிக்கணக்கான பணம் யாருடையது என்பதெல்லாம் விசாரணையின்போது தெரியவரும். இவ்வாறு சந்திரசேகர ராவ் பேசினார்.
சந்திரசேகர ராவின் கற்பனை நாடகம்: மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி பதிலடி
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறும்போது, ‘‘பேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோ முதல்வர் சந்திரசேகர ராவின் சொந்த கற்பனை நாடகம். அதற்கான திரைக்கதை, வசனம் எல்லாம் அவருடையதே. அந்த 4 எம்.எல்.ஏக்களில், 3 பேர் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து டிஆர்எஸ் கட்சிக்கு தாவியவர்கள்தான். அப்படி இருக்கையில், நீங்களா ஜனநாயகம் குறித்து பேசுவது? அரசை கவிழ்க்க வேண்டுமென நாங்கள் நினைக்கவில்லை. தனது மகனை எப்படியாவது முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்து விட வேண்டுமென்பதே சந்திரசேகர ராவின் கனவு. அதை நிறைவேற்ற துடிக்கிறார். 4 நடிகர்களை அழைத்து வந்து, நீங்களே கண்காணிப்பு கேமராக்களை செட் அப் செய்து, நடிக்க வைத்து மக்களை ஏமாற்ற முடியாது’’ என்றார்.