'ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்லுங்கள்' என கூறிய எம்.பி. 15 நாட்கள் சஸ்பெண்ட்

பாரிஸ்,

ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோர் ஆண்டு தோறும் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது வழக்கம். மத்திய தரைக்கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும்போது படகு விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது, அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானது. அப்போது, தரைக்கடல் பகுதியில் இருந்த தன்னார்வு தொண்டு அமைப்பை சேர்ந்த 3 கப்பல்கள் அகதிகளை மீட்டு ஐரோப்பாவிற்கு அழைத்து வந்தன.

ஆனால், அதிகாரிகள் அனுமதி மறுத்ததையடுத்து 1,000 அகதிகளுடன் வந்த 3 கப்பல்களும் இத்தாலி கடல் எல்லையில் மத்திய தரைக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஐரோப்பிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மத்திய தரைக்கடலில் கப்பலில் உள்ள அகதிகள் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை விவாதம் நடைபெற்றது.

அப்போது, ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட கருப்பினத்தவரான இடதுசாரி எம்.பி. கார்லொஸ் மார்டின்ஸ் பிலாங்கோ, அகதிகளை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இந்த விவகாரத்தில் தீர்வுகான உதவ வேண்டும் என்றார்.

அப்போது, குறுக்கிட்ட வலதுசாரி கட்சி எம்.பி.யான கிரிகோயர் டி போர்னாஸ், அவர்கள் ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்ல வேண்டும்’ என்று பிரஞ்ச் மொழியில் கூறினார். இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

பிரஞ்ச் மொழியில் ‘ அவர்கள் ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்ல வேண்டும்’ மற்றும் ‘அவர் ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்ல வேண்டும்’ என்றபதற்கு ஒரே வாக்கியம் தான் பயன்படுத்தப்படுகிறது.

அதனால், கருப்பின எம்.பி.யான கார்லொசை வெள்ளையின எம்.பி. கிரிகோயர் ஆப்பிரிக்காவுக்கு திருப்பி செல்ல வேண்டும் என்று சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் அகதிகளை தான் ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று கூறியதாக கிரிகோயர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், ‘ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்லுங்கள்’ பேச்சுக்கு கண்டனம் எழுந்த நிலையில் எம்.பி. கிரிகோயரை நாடாளுமன்றத்தில் இருந்து 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். கிரிகோயர் 15 நாட்கள் நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்கேற்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.