இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்… இத்தனை தேர்தல்களில் வாக்களித்தவரா!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளராக அறியப்படும் 106 வயதான ஷ்யாம் சரண் நெகி, வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு இன்று இறுதி மரியாதை நடத்தப்படுகிறது. 

ஹிமாச்சல் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் வசித்து வரும் அவருக்கு பல நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பாக அவருக்கு இறுதி மரியாதை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மறைந்த ஷ்யாம் சரண் நெகி, கடந்த நவ. 2ஆம் தேதி அன்றுதான், ஹிமச்சால் சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். உடல்நிலை காரணமாக அவர் தபால் வாக்கு முறையில் வாக்களித்தார். வாக்களித்த பின் கூறிய ஷ்யாம் சரண் நெகி,”ஜனநாயகத்தின் பெரும் திருவிழா என்பது தேர்தல்தான். அதில், நமது பங்கு நாம் ஆற்ற வேண்டும்” என்றார். 

இவர் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்தற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டில்,”இவரது சிந்தனை பாராட்டத்தக்கது. இளம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கவும், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் இது உத்வேகமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூரும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

1917ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்த நெகி, பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் 1952ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஹிமாச்சலில் பனிப்பொழிவு அதிகமிருக்கும் என்பதால், ஐந்து மாதங்களுக்கு முன்னரே, அதவாது 1951 அக்டோபர்  மாதத்தில், ஹிமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. 

அதில், அக்டோபர் 25 நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில், நெகி முதல் ஆளாக வந்து வாக்களித்து, வரலாற்றில் நீங்கா இடத்தை பிடித்தார். இதுவரை 34 முறை தேர்தலில் வாக்களித்துள்ளார். இவர் ‘சனம் ரே’ என்ற இந்தி திரைப்படத்தில் கௌரவ தோற்றத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.