டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நவம்பர் 2-ந் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அப்போது இடையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அந்த அணியால் 16 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டம் தொடர்பாக பல்வேறு வீரர்கள் ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக செயல்பட்டது என கருத்து தெரிவித்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கூறும்போது, எந்த விலைகொடுத்தாயினும் இந்தியா அரையிறுதிக்கு செல்ல ஐசிசி விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி கூறியதாவது:-
இது நியாயமானதாக இல்லை. எங்களுக்கு சாதகமாக ஐசிசி செயல்படுவதாக நான் நினைக்கவில்லை. எல்லாரும் சமமாக நடத்தப்படுகின்றனர். எந்த வகையிலும் அவர்கள் எங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக கூற முடியாது. மற்ற அணிகளை காட்டிலும் வித்தியாசமாக எங்களுக்கு என்ன கிடைத்துள்ளது. கிரிக்கெட்டில் இந்தியா ஒரு மிகப்பெரிய சகிதியாக உள்ளது ஆனால், அனைவரும் சமமாகவே நடத்தப்படுகிறோம்.
மேலும் அவர் கூறும்போது, இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுமா? இல்லையா? என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அது எங்களுடைய முடிவு அல்ல. மற்ற அணிகள் இங்கு வரும் போதும், நாம் மற்ற இடங்களுக்கு செல்லும் போதும் அரசிடம் அனுமதி பெற வேண்டும். நாங்கள் சொந்தமாக முடிவு எடுக்க முடியாது. அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு அனுமதி வர வேண்டும் என்றார்.