இந்த ஆண்டின் கடைசி சனிப்பிரதோஷம் – தவறாமல் செய்ய வேண்டிய சில வழிபாட்டுக் குறிப்புகள்!

சனிக்கிழமைகள் என்றாலே இந்தக் காலத்தில் பலரும் கொண்டாட்டம் என்று பொருள் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி அல்ல. சனிக்கிழமைகள் நாம் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் மிகுதியான பலனைத் தரும். அதைத்தான் சனிப்பெருக்கு என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். சனிக்கிழமைகளில் புத்தாடை அணிந்தால் மேலும் மேலும் புத்தாடைகள் சேரும் என்பது பலரின் நம்பிக்கை.

அதேபோன்று சனிக்கிழமைகளில் செய்யும் தீமைகளும் பெருகும் தன்மையை அடையும். அதனால் சனிக்கிழமைகள் தவறான வழியில் செலவழிக்கப் படக்கூடாதவை. காரணம் இந்தக் கிழமைக்கு உரிமையானவர் சனிபகவான். அவரைப் போலக் கொடுப்பாரும் இல்லை. அவரைப்போலக் கெடுப்பாரும் இல்லை என்று ஒரு ஜோதிடப் பழமொழி உண்டு. அதன் பொருள் அவருக்குரிமையான சனிக்கிழமைகளில் நற்செயல்கள் செய்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவார். தீயசெயல்கள் செய்தால் அதற்குரிய பலனைத் தந்து கெடுக்கவும் செய்வார் என்பது நம்பிக்கை.

நந்தி

அதனால்தான் நம் முன்னோர்கள் சனிக்கிழமைகளை வழிபாட்டுக்குரியவை என்று தீர்மானித்தார்கள். பெருமாளை வழிபட வேண்டிய நாள். அனுமனை சனிக்கிழமை வழிபடுவதன் மூலம் அதிக பலன்களைப் பெறலாம். மாலை பிரதோஷ வேளை சிவ வழிபாட்டுக்கு உகந்தது. அதிலும் மகுடம் வைத்தாற்போல சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் என்றால் அன்று சிவ வழிபாடு செய்யும் பலன்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் ஆலகால விஷம் தோன்றியது. விஷத்தால் இந்தப் பிரபஞ்சமே மாசடைந்து துன்புற்றது. அப்போது அங்கு எழுந்தருளிய சிவபெருமான் அந்த விஷத்தை உண்டு பிரபஞ்சத்தைக் காத்தார். அதனால் மயக்கம் உற்றவர் போல இருந்த ஈசன் தேவர்கள் கலங்கி நிற்க அவர்களின் கலக்கம் போக்கும் வண்ணம் எழுந்து நடமாடத் தொடங்கினார். அப்படி அவர் ஆனந்த நடனமாடிய திதியே பிரதோஷ திதியாகிய திரியோதசி. ஆதியில் இது நிகழ்ந்தது ஒரு சனிக்கிழமையில். எனவே சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ திதி மிகவும் பிரசித்தம். இதை மகாபிரதோஷம் என்று போற்றுவார்கள்.

பிரதோஷங்களில் உயர்ந்தது என்று போற்றப்படும் சனிப்பிரதோஷத்தன்று சிவ வழிபாடு செய்யவேண்டியது கட்டாயம். மாலை சிவன் கோயிலுக்குச் சென்று சிவ தரிசனம் செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்பவர்களுக்குத் துன்பங்கள் தீரும். கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தனை சிறப்பு மிக்க சனிப்பிரதோஷம் அடிக்கடி வராது. ஓர் ஆண்டில் நான்கு அல்லது ஐந்து முறை மட்டுமே வரும். எனவே அதைத் தவறவிடக் கூடாது.

இன்று அத்தகைய சனிப்பிரதோஷம் அமைந்துள்ளது. இன்று பகல் பொழுது முழுமையும் துவாதசி திதி உள்ளது. மாலை 6.14 மணிக்கு திரியோதசி திதி தொடங்குகிறது. என்று மாலை வேளையில் திரியோதசி திதி வருகிறதோ அன்றே பிரதோஷம். எனவே இன்றே பிரதோஷம்.

சிவபெருமான்

இந்த நாள் மாலையில் ஆலயங்களில் சிவவழிபாடும் நந்தி வழிபாடும் செய்வது அவசியம். நந்தியே குருபரம்பரையின் முதல்வர். குருவின் திருவடிகளில் நாம் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை அவர் கனிவோடு இறைவனிடம் சேர்ப்பித்து நம் கோரிக்கைகளை நிறைவேற வழி செய்வார். அதுவும் பிரதோஷ வேளையில் நாம் கேட்கும் அனைத்தையும் அருளும் கருணாமூர்த்தியாக நந்திதேவர் திகழ்வார். எனவேதான் பிரதோஷ தினத்தில் அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அப்படி நந்திக்குச்செய்யும் அபிஷேகத்துக்கு ஏதேனும் ஒரு திரவியம் வாங்கிக்கொடுத்து வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வது சிறப்பு. அவற்றில் நம் தேவை எதுவோ அதை அறிந்து அபிதேகப் பொருள் கொண்டு செல்வதும் அவசியம்.

அபிஷேகப் பொருள்களும் பலன்களும்…

1. தயிர் – குழந்தை வரம் கிட்டும்.

2. சந்தனம் – அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் பெருகும்.

3. அரிசி மாவு – கடன் தொல்லைகள் தீரும்.

4. விபூதி – வேலை வாய்ப்பு அமையும்

5. சர்க்கரை – எதிரிகள் தொல்லைகள் தீரும்.

6. இளநீர் – குடும்பம் இன்பமாக விளங்கும்.

7. எலுமிச்சைச் சாறு – மரண பயம் நீங்கும்.

8. பால் – ஆரோக்கியம் மேம்படும்.

9. பஞ்சாம்ருதம் – ஐஸ்வர்யம் கிட்டும்.

10. நெய் – முக்தி கிடைக்கும்.

அண்ணாமலையில் அபிஷேகம்!

இவ்வாறு நம் தேவைக்கு ஏற்ப சிறிதேனும் பொருள் வாங்கி அபிஷேகத்துக்குக் கொடுத்து பெரும் பலனை அடைய உதவும் சனிப்பிரதோஷம் இன்று கூடியுள்ளது. இதேபோன்று சனிப்பிரதோஷம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமே கிடைக்கும். எனவே இன்று தவறாமல் சிவனையும் நந்தியையும் வழிபட்டு வரும் 2023-ம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டிக்கொள்வோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.