இலங்கையில் இருந்து கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து அங்கு வசிக்கும், தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருகை தருகின்றனர். இன்று 3 மாத கைக்குழந்தையுடன் 10 பேர் தமிழகம் வருகை தந்துள்ளனர்.

இலங்கையில்   உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  மேலும் பல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால், அங்கு வசிக்கும் ஏழை எளிய மக்கள், இலங்கை தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால், அங்கிருந்து இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 பேர் தமிழகம் வந்துள்ளனர். இலங்கை தமிழரான ஜஸ்டின், அவரது மனைவி அவுஸ்யா அவரது 3 மாத கைக்குழந்தை, மற்றும்  மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி யோகேஸ்வரி, அவரது இரு மகள்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பம் மற்றும் அவரது மகன் பிரபாகரன் என  குடும்பத்தை சேர்ந்த 10 பேர் நேற்று இரவு மன்னாரில் இருந்து ஒரு பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை 1 மணியளவில் நடுத்திட்டு பகுதியில் வந்திறங்கினர்.

அந்த பகுதியில் ரோந்து வந்த  கடலோர காவல்படையினர் அவர்களை மீட்டு, அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இலங்கையில் குழந்தைகளை வைத்து வாழ முடியாது சூழல் ஏற்பட்டுள்ளதால் பலத்த மழை மற்றும் சூறைக் காற்றுக்கு மத்தியில் பைபர் படகில் உயிரை பணயம் வைத்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தாக  தெரிவித்தனர். விசாரணைக்கு பின் 10 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என கடலோர போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அகதியாக வந்தவர்களில் ஒருவர்  புஷ்பம் என்பவர் கூறும்போது, “இலங்கையில் விலைவாசி ஒரு பக்கம் உயர்ந்தாலும், பணம் இருந்தால் கூட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. சர்க்கரை ரூ.300, அரிசி ரூ. 250, பால் ரூ. 200க்கும் விற்கப்படுகிறது. இதனால் கூலித்தொழில் செய்து பிழைக்கும் எங்களால் அங்கு வாழ முடியவில்லை, உடல்நலப் பாதிப்பு என்றால் கூட தேவையான மருந்துகள் கிடைப்பதில்லை என்று கூறியவர், அதனால்தான் தமிழ்நாடு வர முடிவு செய்ததாக தெரிவித்தவர், நேற்று இரவில் படகில் வரும்போது பயமாகதான் இருந்தது. உயிரை பணயம் வைத்து வந்தோம். வரும்போது மழை பெய்ததால்,  மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினோம்.  இலங்கையில்  வாழ்வதை விட படகில் வரும்போது இறந்தால் கூட பரவாயில்லை என்று எண்ணிதான் இங்கு வந்தாக தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து  இதுவரை 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.