இலங்கை அருகே வரும் 9-ம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இலங்கையை ஒட்டி, தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 9-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, வரும் 10, 11-ம் தேதிகளில் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். இதன் முன்னேற்றம் பின்வரும் நாட்களில் தெரியும்.
வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரியில் தீவிரமாக உள்ளது. நவ. 4-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை தண்டையார்பேட்டையில் 14 செ.மீ., டிஜிபி அலுவலகம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தலா 12 செ.மீ., நாகை மாவட்டம் வேதாரண்யம், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தலா 10 செ.மீ., சென்னை பெரம்பூரில் 9 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கடம்பூர், ஸ்ரீவைகுண்டம், சென்னை ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் நவ. 5, 6, 7, 8-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ. 5-ம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், வரும் 8, 9-ம் தேதிகளில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.