பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் மாடலாகப் பணியாற்றியவர். 2000-ம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் பிரியங்கா வெற்றி பெற்றதுதான் பாலிவுட்டில் அவர் கால்பதிப்பதற்கான ஒரு படிக்கல்லாக இருந்தது. ஆனால் தற்போது பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது மோசடியானது என்ற குற்றச்சாட்டை 2000-ம் ஆண்டில் அவருடன் உலக அழகிப்போட்டியில் பங்கேற்ற முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி முன்வைத்துள்ளார். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற 2022 உலக அழகிப் போட்டியில் ஸ்பான்சரை முன்வைத்து சில முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் 2000-ம் ஆண்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறியது என்று லீலானி மெக்கோனி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “2000-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டியில் இதேபோன்ற நிலையை நான் சந்தித்தேன். ஆனால் அப்போது நான் அதைக் கடந்து சென்றுவிட்டேன். மிஸ் இந்தியா வென்ற பிரியங்காவுக்கு ஸ்பான்சராக இருந்த நிறுவனம் உலக அழகிப் போட்டிக்கும் ஸ்பான்சராக இருந்ததால் பிரியங்கா சோப்ராவால் எளிதாக வெற்றி பெற முடிந்தது.
அந்தப் போட்டியில் பிரியங்காவுக்கு நீச்சலுடையிலும் சேலையிலும் போஸ் கொடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு அந்த உடைகள் அணிய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பிரியங்கா சோப்ராதான் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தது. போட்டி தனக்குச் சாதகமாக நடப்பது தெரிந்தும் பிரியங்கா சோப்ரா அதில் கலந்துகொண்டது தவறானது” என்று லீலானி பிரியங்கா சோப்ரா மீது குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.